போதைப்பொருள் பாவனை - வர்த்தகர்களை கைது செய்யும் விசேட வேலைத்திட்டம்





 (க.கிஷாந்தன்)

 

கொட்டகலை பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலைகளில் கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து போதைக்கு அடிமையாகும் பாடசாலை மாணவர்களை மீட்கும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவர் புஷ்பா விஸ்வநாதன் மற்றும் நுவரெலியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் தலைமையில் கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் இந்து ஆலய மண்டபத்தில் நேற்று (20) மாலை இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவதற்கான ஆரம்கட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

 

கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தில் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், நகர வர்த்தகர்கள், மதகுருமார்கள், வாகன சாரதிகள், கிராம சேவகர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

 

இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட கொட்டகலையில் உள்ள பிரதான பாடசாலைகள் மற்றும் தோட்டப்புற பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், தமது பாடசாலைகளில் உயர்தரத்தில் கல்வி கற்கும் பெருமளவிலான மாணவர்கள் பல்வேறு போதைப்பொருட்களை பாவிக்கும் பழக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர் என கருத்துகளை பகிர்ந்தனர்.

 

இக்கலந்துரையாடலில், அவ்வாறான மாணவர்கள் இனங்காணப்பட்டு, அந்த மாணவர்களை வகுப்புக்களுக்கு தடைவிதித்து, அதற்கமைவாக, போதைப்பொருள் பாவனையிலிருந்து ஏனைய மாணவர்களை காப்பாற்ற, பெற்றோரின் ஆதரவுடன் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டுமென, அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

 

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதான பாடசாலைகள் மற்றும் தோட்டப்புற பாடசாலைகளில் 6 ஆம் ஆண்டு முதல் 11 ஆம் ஆண்டு வரையிலான வகுப்புகளில் உள்ள மாணவர்களின் வருகைப்பற்றாக்குறை காணப்படுவதாகவும், அந்த மாணவர்களும் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக இதன்போது அதிபர்கள் சுட்டிக்காட்டினர்.

 

அத்தோடு, கொட்டகலை நகரில் உள்ள குறிப்பிட்ட சில மருந்துக் கடைகளில் (பாமசி) பாடசாலை மாணவர்களுக்கு போதை மருந்துகளை விற்பனை செய்வதாகவும், போதைப்பொருளை வாங்கிய பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு வந்து மிக இரகசியமாக போதைப் பொருட்களை அருந்துவதாகவும் அதிபர்கள் இதன்போது மேலும் தெரிவித்தனர்.

 

இக்கலந்துரையாடலில் அதிபர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் ஆகியோர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், இந்த போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மாணவர்களை விடுவிக்கவும், சமூகத்தை பாதுகாப்பதற்காகவும், அது தொடர்பாக ஆராய்வதற்கான குழுக்களை நியமிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவர் புஷ்பா விஷ்வநாதன் தெரிவித்ததோடு, போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களை பற்றி பொலிஸாருக்கு தகவல்களை வழங்க பொது மக்கள் உதவி செய்ய வேண்டும் என  நுவரெலியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் தனது உரையில் கோரிக்கையும் முன்வைத்தார்.