ஜெயிக்கப் போவது யாரு?





 (நெவில் அன்தனி)


முதல் சுற்றிலிருந்து அரை இறதிவரை எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத  அற்புதமான ஆற்றல்களை கடந்த நான்கு வாரங்களாக வழங்கிவந்த எட்டாவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் சம்பியனைத் தீர்மானிக்கும் இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மாபெரும் இறுதிப் போட்டி மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ளது.


இலங்கை நேரப்படி இந்த இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.


ஏறத்தாழ ஒரே மாதிரியான பெறுபேறுகள்




இறுதி ஆட்டத்தை நோக்கிய இங்கிலாந்தினதும் பாகிஸ்தானினதும் பயணம் அதாவது அவற்றின் பெறுபேறுகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்ததுடன் இரண்டு அணிகளுக்கும் அரை இறுதி வாய்ப்புகளும் மிக சொற்பமாகவே இருந்தன.


இரண்டு அணிகளும் தத்தமது குழுக்களில் கடைசி சுப்பர் 12 சுற்று போட்டிகளில் வெற்றிபெற்று இரண்டாம் இடங்களைப் பெற்று அரை இறதிகளில் விளையாட தகுதிபெற்றன.


குழு 1இல் நியூஸிலாந்தும் குழு 2இல் இந்தியாவும் முதலாம் இடங்களைப் பெற்றபோது அந்த இரண்டு அணிகளும் அரை இறுதிகளில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழையும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.




ஆனால், முதலாவது அரை இறுதியில் நியூஸிலாந்தை பாகிஸ்தான் 7 விக்கெட்களாலும் 2ஆவது அரை இறுதியில் இந்தியாவை இங்கிலாந்து 10 விக்கெட்களாலும் மிக இலகுவாக வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகதிபெற்றன.


இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் 2009இல் சம்பியனான பாகிஸ்தான் மூன்றவாது தடவையாகவும் 2010இல் சம்பியனான இங்கிலாந்து இரண்டாவது தடவையாகவும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளன.


30 வருடங்களின் பின்னர் மீண்டும் இங்கிலாலந்து - பாகிஸ்தான்


1992 உலகக் கிண்ண (50 ஓவர்) இறுதிப் போட்டியில் விளையாடிய அதே நாடுகளின் அணிகள் 3 தசாப்தங்களுக்குப் பின்னர் அதே அரங்கில் ரி 20 வகையான உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளமை விசேட அம்சமாகும்.


இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் 30 வருடங்களுக்கு முன்னர் மெல்பர்னில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கிறஹாம் கூச் தலைமையிலான இங்கிலாந்தை 22 ஓட்டங்களால் வெற்றிகொண்டு 50 ஓவர் கிரிக்கெட்டில் உலக சம்பியனாகியிருந்தது.


இப்போது ஜொஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்தும் பாபர் அஸாம் தலைமையிலான பாகிஸ்தானும் இம்முறை சம்பியன் பட்டத்துக்கு குறிவைத்து அதே அரங்கில் மோதவுள்ளன.


இன்றைய போட்டியில் வெற்றிபெற்று சம்பியனாகும் அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு அடுத்ததாக இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில்   இரண்டு தடவைகள் சம்பியனான இரண்டாவது அணி என்ற பெருமையைப் பெறும்.


இரண்டாவது தடவையாக உலக சம்பியனாக வேண்டும் என்ற வேட்கையுடன் இரண்டு அணிகளும் இன்றைய இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளதால் இப் போட்டி கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.


இங்கிலாந்தின் துடுப்பாட்டத்திற்கும் பாகிஸ்தானின் பந்துவிச்சுக்கும் இடையே இடம்பெறப்போகும் போட்டி


இந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தின் துடுப்பாட்டத்திற்கும் பாகிஸ்தானின் பந்தவீச்சிற்கும் இடையிலான போட்டியாக அமையும என எதிர்பார்க்கப்படுகிறது.


இங்கிலாந்து வீரர்கள் ஆக்ரோஷத்துடனும் துணிச்சலுடனும் துடுப்பெடுத்தாடக்கூடியவர்கள் மடடுமல்லாமல் அவ்வணியின் துடுப்பாட்ட வரிசை நீளமானது.




ஆனால், நடந்து முடிந்த போட்டிகளில் இங்கிலாந்து சார்பாக இருவர் மாத்திரமே சிறப்பாக துடுப்பெடுத்தாடியுள்ளனர்.


இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் 5 போட்டிகளில் 2 அரைச் சதங்களுடன் மொத்தமாக 211 ஓட்டங்களைப் பெற்றதுடன்  ஜொஸ் பட்லர் 5 பொட்டிகளில் 2 அரைச் சதங்களுடன் 199 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இவர்கள் இருவரைவிட வெறு எவரும் 60 மொத்த ஓட்டங்களைப் பெறவில்லை.




பந்துவீச்சில் சாம் கரன் (5 போட்டிகளில்  10 விக்கெட்கள்), உபாதைக்குள்ளாகி இருக்கும் மார்க் வூட் (4 போட்டிகளில்  9 விக்கெட்கள்) ஆகிய இருவரே சிறப்பாக செயற்பட்டுள்ளனர். மார்க் வூட் இன்றைய போட்டியில் விளையாடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பாகிஸ்தானின் பலம் அதன் பந்துவீச்சில் தங்கியிருப்பதுடன் அதன் ஆரம்ப வேகப்பந்துவீச்சாளர்கள் திறமையாக பந்தவீசியுள்ளனர். அவ்வணியின் சுழல்பந்துவீச்சும் சிறப்பாகவே அமைந்துள்ளது.


பாகிஸ்தான் அணியில் மொஹமத் ரிஸ்வான் 6 போட்டிகளில் ஒரு அரைச் சதத்துடன் 160 ஓட்டங்களையும் ஷான் மசூத் 6 போட்டிகளில் ஒரு அரைச் சதத்துடன் 137 ஓட்டங்களையும் இப்திகார் அஹ்மத் (6 போட்டிகளில் 2 அரைச் சதங்களுடன் 114 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.




ஷஹீன் ஷா அப்றிடி (6 போட்டிகளில் 10 விக்கெட்கள்), ஷதாப் கான் (6 போட்டிகளில் 10 விக்கெட்கள்) ஆகியோர் பந்துவீச்சில் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.


பாபர் அஸாம் 6 போட்டிகளில் ஒரு அரைச் சதத்துடன் 92 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளார். அவர் இறுதிப் போட்டியில் முழுத் திறமையுடன் துடுப்பெடுத்தாடி கணிசமான ஓட்டங்களைப் பெறுவார் என நம்பப்படுகிறது.


இது இவ்வாறிருக்க, இரண்டு அணிகளினதும் வெற்றிகளில் களத்தடுப்புகளும் முக்கிய பங்காற்றியிருந்தன.


ஒட்டுமொத்தத்தல் இரண்டு அணிகளும் சிரமமான ஆரம்பங்களின் பின்னர் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தி முக்கிய வெற்றிகளை ஈட்டி இன்றைய இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளன. இந் நிலையில் இன்றைய இறுதிப் போட்டிகளில் எந்த அணி மிகச் சிறந்த நுட்பத்திறன்களுடனும் புத்திசாதுரியத்துடனும் விளையாடுகின்றதோ அந்த அணிக்கே ச்ம்பியன் பட்டத்தை சுவீகரிக்கும்.


அணிகள் கடந்துவந்த பாதை


இங்கிலாந்து



சுப்பர் 12


எதிர் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்களால் வெற்றி


எதிர் அயர்லாந்து - DLS முறைமை 5 விக்கெட்களால் தோல்வி


எதிர் அவுஸ்திரேலியா - மழையினால் ஆட்டம் கைவிடப்பட்டது


எதிர் நியூஸிலாந்து - 20 ஓட்டங்களால் வெற்றி


எதிர் இலங்கை - 4 விக்கெட்களால் வெற்றி


அரை இறுதி


எதிர் இந்தியா - 10 விக்கெட்களால் வெற்றி


பாகிஸ்தான்



சுப்பர் 12 சுற்று


எதிர் இந்தியா - 4 விக்கெட்களால் தோல்வி


எதிர் ஸிம்பாப்வே - ஒரு ஓட்டத்தால் தோல்வி


எதிர் நெதர்லாந்து - 6 விக்கெட்களால் வெற்றி


எதிர் தென் ஆபிரிக்கா - DLS முறைமை 33 ஓட்டங்களால் வெற்றி


எதிர் பங்களாதேஷ் - 5 விக்கெட்களால் வெற்றி


அரை இறுதி


எதிர் நியூஸிலாந்து - 7 விக்கெட்களால் வெற்றி


இங்கிலாந்து முன்னிலை


இங்கிலாந்தும் பாகிஸ்தானும் இரண்டு தடவைகள் மாத்தரமே இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன.


லண்டன் ஓவலில் 2009இல் இரண்டு அணிகளும் மோதிக்கொண்டபோது இங்கிலாந்து 48 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.




பிறிஜ்டவுனில் 2010இலும் பாகிஸ்தானுடனான போட்டியில் 6 விக்கெட்களால் இங்கிலாந்து வெற்றிபெற்றிருந்தது.


சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியிலும் இங்கிலாந்து முன்னிலையிலேயே இருக்கிறது.


இரண்டு அணிகளும் மோதிக்கொண்ட 28 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 17 - 9 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. சமநிலையில் முடிவடைந்த பொடடியில் சுப்பர் ஓவரில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. மற்றொரு போட்டியில் முடிவு கிட்டவில்லை.


சீரற்ற காலநிலை நிலவினால்...


இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மெல்பர்னில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ரீ 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி மழையினால் தடைப்படலாம் என அஞசப்படுகிறது.


ஒருவேளை ஞாயிற்றுக்கிழமை மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைப்பட்டால் ஒதுக்கப்பட்டுள்ள நாளான திங்களன்று போட்டியை நடத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை எண்ணியுள்ளது.


ஆனால், திங்களன்றும் சீரற்ற காலநிலை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டால் உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக இரண்டு நாடுகள் இணை சம்பியன்களாக பிரகடனப்படுத்தப்படும்.


சுப்பர் 12 சுற்றில் போட்டி முடிவுக்கு குறைந்தது 5 ஓவர்கள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவேண்டும். ஆனால், இறுதிப் போட்டியில் முடிவைத் தீர்மானிக்க குறைந்தது 10 ஓவர்கள் வீதம் விசப்பட்டிருக்கவேண்டும்.


ஞாயிறன்று ஆட்டம் ஆரம்பமாகி மழையினால் தடைப்பட்டால் விடப்பட்ட இடத்திலிருந்து திங்களன்று ஆட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அணிகள்


இங்கிலாந்து: ஜொஸ் பட்லர் (தலைவர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மாலன் அல்லது ஃபில் சோல்ட், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், ஹெரி ப்றூக், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், சாம் கரன், ஆதில் ராஷித், மார்க் வூட் அல்லது கிறிஸ் ஜோர்டன்.




பாகிஸ்தான்: பாபர் அஸாம் (தலைவர்), மொஹமத் ரிஸ்வான், ஷான் மசூத், மொஹமத் ஹரிஸ், இப்திகார் அஹ்மத், ஷதாப் கான், மொஹமத் நவாஸ், ஹரிஸ் ரவூப், மொஹமத் வசிம், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்றிடி.