(காரைதீவு சகா)
சித்தர்களின் குரல் அமைப்பினர் தீபாவளியை முன்னிட்டு மொனராகலையை அடுத்துள்ள அடர்ந்த கபிலவனத்தில் அமைந்துள்ள கபிலவத்தையில் சிறப்பான விஷேட பூஜை, தியானம், வழிபாட்டை மேற்கொண்டனர்.
சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சிவசங்கர் ஜி தலைமையிலான குழுவினர் , கபிலவத்தையில் ஏலவே நிறுவி பிரதிஷ்டை செய்யப்பட்ட முருகப்பெருமானின் விக்ரகம் முன்னிலையில், பொங்கல் படைத்து ,மந்திர உச்சாடனம் செய்து வழிபட்டார்கள்.
"ஆதி கதிர்காமம் "என அழைக்கப்படும் வரலாற்று பிரசித்தி பெற்ற கபிலவத்தை முருகப்பெருமான் உறைந்த பாரிய புளிய விருட்சத்தை மௌனமாக தரிசித்து முப்பது நிமிடங்கள் தியானம் செய்தார்கள்.
28 பேரடங்கிய குழுவினர் சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சிவசங்கர் ஜியின் முறையான நெறிப்படுத்தலில் ஒவ்வொருவராக உட்பிரவேசித்து புளிய மரத்தடியில் உணர்வு பூர்வமாக பயபக்தியுடன் வழிபட்டனர். அனைவரும் வீழ்ந்து வணங்கினர்.
சித்தர்கள் குரல் அமைப்பின் தலைவர் ஆதித்தன், உப தலைவர் மனோகரன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் ,நமசிவாய மகேஸ்வரன் சுவாமிகளின் ஆலோசனையின்படி இத்தரிசனம் நடைபெற்றது..
பிரபல நாதஸ்வர வித்துவான் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பாலகுமாரன் குழுவினரின் அருமையான பஜனைபாடலும் இடம்பெற்றது.
காரைதீவைச் சேர்ந்த ஆன்மீக ஆர்வலர்களான தவிசாளரும் தர்மகத்தாவுமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், கல்வியியலாளர் வி.ரி.சகாதேவராஜா , திருகோணமலை பிரகாஷ் ஆசிரியர், கனடா அன்பர் குமார் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
வழிபாடுகளின் பின்னர் புறமுதுகு காட்டாமல் மௌனமாக திரும்பி பார்க்காமல் அவ்விடத்தை விட்டு பக்திப் பரவசத்துடன் வெளியேறினர்.
பங்கேற்ற பக்தர்களுக்கு இது வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
Post a Comment
Post a Comment