வாக்கெடுப்பின்றி தெரிவு





 (க.கிஷாந்தன்)

 

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கான புதிய தலைவராக இராமன் கோபாலகிருஸ்ணன் வாக்கெடுப்பின்றி (26) இன்று காலை ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்.

 

ஆளும் கட்சி, எதிர் கட்சியென 15 உறுப்பினர்களை கொண்ட அக்கரப்பத்தனை பிரதேச சபை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வசமுள்ளது.

 

இந்த நிலையில் கடந்த நான்கரை ஆண்டுகளாக தவிசாளர் பதவியை வகித்த எஸ்.கதிர்செல்வன் கடந்த மாதம் தன்னிச்சையாக தனது தவிசாளர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

 

இருப்பினும் இவரின் பதவி விலகலை தொடர்ந்து பொதுஜன பெரமுனவை சேர்ந்த ஜெயலத் என்பவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்தார்.

 

எனினும் அக்கரப்பத்தனை பிரதேச சபையின் எஞ்சியுள்ள ஆயுள் காலத்திற்கு நிரந்தரமாக தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டிய கட்டாய நிலையில் இந்த புதிய தவிசாளர் நியமனம் இடம்பெற்றது.

 

இதில் 15 உறுப்பினர்களை கொண்ட சபையில் 13 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர்.

 

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பங்காளி கட்சியான தொழிலாளர் தேசிய சங்கத்தை சார்ந்த எஸ்.சிவனேஷன் மற்றும் சுதாகர் ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

 

இருப்பினும் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட 13 உறுப்பினர்களை கொண்டு வாக்கெடுப்பை தலைமை தாங்கி நடாத்திய மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மேனக ஹேரத் புதிய சபை தலைவரை நியமிக்க சட்டவாக்கங்களை சபையில் அறிவித்ததோடு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க பெயரை மும்மொழியுமாறு அறிவித்தார்.

 

இதனையடுத்து சபையின் புதிய தலைவராக உறுப்பினர் ராமன் கோபாலகிருஸ்ணன் பெயரை முன்னாள் தவிசாளர் எஸ். கதிர்செல்வன் மும்மொழிய பிரான்ஸிஸ் தேவ ஆசிர்வாதம் வழிமொழிந்தார்.

 

அதே நேரத்தில் வேறு எவரும் தவிசாளர் பதவிக்கு போட்டியிடவில்லை.

 

இந்த நிலையில் அக்கரப்பத்தனை பிரதேச சபையின் புதிய தவிசாளராக இராமன் கோபாலகிருஸ்ணன் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டதாக ஆணையாளர் உத்தியோகபூர்வமாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.