தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் பாரிய மண்சரிவு - வீதிக்கு பூட்டு




 !


க.கிஷாந்தன்)

 

தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் 25.10.2022 அன்று மாலை தலவாக்கலை நகரத்தை அண்மித்த பகுதியான ஒலிரூட் பகுதியில் பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

மலையக பகுதிகளில் சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பிரதான வீதிகளில் பாரிய மண்சரிவுகள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. அந்தவகையில், தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியிலும் இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

 

இதன்காரணமாக தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் குறித்த வீதிக்கு பதிலாக வேறு மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

இதேவேளை, இந்த மண்சரிவு ஏற்பட்ட இடத்தின் கீழ் பகுதியில் உள்ள வீடொன்றின் மீதும் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.

 

தலவாக்கலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் பல வீதிகள் மண்மேடு சரிந்து விழுந்துள்ளதுடன், அந்த வீதிகளின் போக்குவரத்து ஒரு வழி போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.