ட்விட்டரில், பலர் பணி நீக்கம்








 உலகின் மிகப்பிரபலமான சமூக ஊடகமான ட்விட்டர் நிறுவனத்தை ரூ.3.62 லட்சம் கோடிக்கு கையகப்படுத்தினார் உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க். 

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா என்ற பெரும் நிறுவனங்களுடன் இப்போது ட்விட்டரையும் தனது பெயருடன் இணைத்துக் கொண்டிருக்கிறார் தொழில்துறை ஜாம்பவான், உலகப் பணக்காரர் எலான் மஸ்க்.

கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்குவதாக அறிவித்தார் எலான் மஸ்க். அதன்பின்னர் இல்லை ட்விட்டரை வாங்கவில்லை என்று அறிவித்தார். அப்புறம் ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாட மீண்டும் இல்லை, இல்லை நான் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினா. இந்நிலையில் தான் நேற்று (வியாழக்கிழமை) அவர் ட்விட்டர் அலுவலகத்திற்குள் கையில் ஒரு கைகழுவும் தொட்டியை தூக்கிக் கொண்டு சென்றார். அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த அவர் அதற்கு தலைப்பு வைத்திருந்ததில் பல உள் அர்த்தங்கள் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. ‘நான் ட்விட்டர் தலைமையகத்திற்குள் நுழைகிறேன். அது மூழ்கட்டும்’ என்று பதிவிட்டிருந்தார். Let that sink in! என்ற அவருடைய ட்வீட் பணக்காரத்தனத்தின் உச்சம் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது

இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை வியாழன் பின்னிரவில் அவர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். உடனடியாக அவர் செய்த அடுத்த வேலை என்ன தெரியுமா? ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தது. அவர் மட்டுமல்ல ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்தார். இதனை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆனால் எலான் மஸ்க் தரப்போ, ட்விட்டர் தரப்போ இதுவரை இந்த பணி நீக்கங்களை உறுதி செய்யவில்லை.

முன்னதாக எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் ஏன் ட்விட்டரை வாங்குகிறேன் என்பதற்கான விளக்கம் அளித்திருந்தார். அதில், “ட்விட்டரை வாங்குவது முக்கியமானது. ஏனெனில் ஒரு பொதுவான டிஜிட்டல் தளம். எல்லோருடைய கருத்துகளையும், நம்பிக்கைகளையும் பகிர்ந்து, ஆரோக்கியமான முறையில் விவாதிக்க ஒரு தளம் தேவை” என்று பதிவிட்டிருந்தார். அது மட்டுமல்லாமல் ட்விட்டர் தலைமையகத்தில் காஃபி பார் ஒன்றில் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.

ஏற்கெனவே ட்விட்டர் மஸ்க் கைவசம் வந்த பின்னர் அவர் இப்போது இருக்கும் ஊழியர்களில் 75% பேரை பணிநீக்கம் செய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் ஊழியர்கள் பலரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு பெயர் குறிப்பிடாமல் பேட்டியளித்த ஊழியர்களில் சிலர், “எலான் மஸ்க்கின் தலைமையில் வேலை பார்க்க விருப்பமில்லாததால் நாங்கள் பணியிலிருந்து விலகிவிட்டோம்” என்றனர். இன்னும் சிலர், “இப்போதைக்கு எந்த கடினமான முடிவையும் எடுப்பதாக இல்லை. சந்தேகத்தின் பலனை அளித்து இன்னும் சில காலம் இங்கேயே பணியைத் தொடர்வோம்” என்று கூறினர். இதற்கிடையில், சமூக செயற்பாட்டாளர்கள் சிலர், “மஸ்க் ட்விட்டரை நடத்தினால் அதில் நம்பகத்தன்மையற்ற தகவல்களும், பல்வேறு அவதூறுகளும், தொல்லைகளும் அதிகரிக்கும்” என்று கவலை தெரிவித்துள்ளனர்.

Post a Comment

[facebook][blogger]

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.