நிந்தவூர் பிரதேச கடலரிப்பினை தடுப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது





 நூருள் ஹுதா உமர்


நிந்தவூர் பிரதேச சபையின் 53 ஆவது சபை அமர்வு நேற்று (31) நிந்தவூர் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது சபையில் கலந்து கொண்டிருந்த உறுப்பினர்கள் கடலரிப்பினை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகள் குறித்தும் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

இதற்கு விளக்கமளித்த தவிசாளர், குறித்த கடலரிப்பை தடுப்பதற்காக கட்சி பேதங்களுக்கப்பால் அனைவரும் முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில் முதற்கட்ட நடவடிக்கையாக ஒலுவில் துறைமுக வளாகத்திலுள்ள பாராங்கற்களை விடுவித்து அக்கற்களைக் கொண்டு தடுப்பு வேலி அமைப்பதற்கான வேளைத்திட்டம் நிந்தவூர் பிரதேச சபையின் ஒரு மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோல பாராளுமன்ற உறுப்பினரால் ஏலவே அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால் அவசரமாக வழங்கப்பட்ட ஐந்து இலட்சம் ரூபாய் உள்ளடங்களாக இரண்டு மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான வேலைத்திட்டங்கள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லையெனவும் அறிய முடிகிறது.

மேலும் நிந்தவூர் பிரதேச சபையில் மூன்று பிரதான கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற  உறுப்பினர்கள் தங்கள் கட்சி தலைமைகள், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு இவ்விடையங்களை கொண்டு சேர்த்து ஊரையும் ஊர் மக்களையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளை எடுக்குமாறும் தவிசாளர் தாஹிர் வலியுறுத்தியிருந்தார்.

இதன் போது கட்சி பேதங்களின்றி மக்கள் சேவையாற்ற தங்களாலும் தங்கள் கட்சி தலைமைகளாலும் முடியுமான விடையங்களை துனிந்து செய்து வருவதாகவும்  உறுப்பினர்கள் சபையில் உறுதியளித்திருந்தனர்.