ஊடகங்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில்,நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு உள்ளது




 


ஊடகங்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்தது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு உள்ளது என்று யூடியூப் சேனல்களை நடத்தி வரும் சில பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். அதில் சந்தேகம் உள்ளதாக மாணவியின் தாயார் தரப்பிலும் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பிலும் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு போரட்டமும் அதைத்தொடர்ந்து கலவரமும் நடந்தன.


இந்த போரட்டத்தில் ஈடுபட்டோரில் நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். பள்ளி தாளாளர், ஆசிரியர், பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.


இதில், பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை ஆகஸ்ட் 26ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தது.


இது தொடர்பாக நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில் 'மாணவி மரணம் தொடர்பாக இணை விசாரணை நடத்தும் சமூக வலைதளங்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அத்தகைய யூடியூப் சேனைல்களை முடக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.


சிவப்புக் கோடு

'எங்கள் மகளுக்கு நீதி வேண்டும்' - முதல்வரிடம் கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் முறையீடு

கள்ளக்குறிச்சி வன்முறை: வழியில் சென்றவர்களும் கைதானதாக புதிய சர்ச்சை - கள நிலவரம்

சிவப்புக் கோடு

இந்த உத்தரவு தொடர்பாக யூடியூப் சேனல்கள் நடத்தும் பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நீதிபதியின் கருத்தை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று 13 யூடியூப் சேனல்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டன.


கள்ளக்குறிச்சி உயர் நீதிமன்றம்

அதில் ஒரு யூடியூப் சேனலான 'அரண் செய்' நிறுவனர் ஹசீஃப் முகம்மதிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.


அறன்செய்

படக்குறிப்பு,

ஹசீஃப் முகம்மது


"அரண் செய் உள்ளிட்ட பெரும்பாலான ஊடகங்கள் மாணவி மரணம் தொடர்பான வழக்கில் சட்டத்திற்கு உள்பட்டேசெயல்படுள்ளன, பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக பிரதிபலிப்பதே ஒரு ஊடகத்தின் வேலை அதையே இவ்வழக்கிலும் நாங்கள் செய்தோம். மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருதிய மாணவியின் தாயாரை பேட்டி கண்டு ஒளிபரப்பினோம்," என்றார்.


யூடியூப்

"சம்பவ நாளில் தொடங்கிய போராட்டம், திடீரென்று வன்முறையாக மாறிய பின் அதில் கைது செய்யப்பட்டவர்களில் சிலர் அப்பாவிகள் என தெரிய வந்தது. அவர்கள் யார் ? என்பதை செய்தியாக்கினோம். உதாரணமாக ஒருவர் தன் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டு வீடு திரும்பியபோது வன்முறை நடக்கிறது. அவரும் இதில் கைதாகிறார், இன்னொருவர் டி.என்.பி.எஸ்.சி மாதிரி தேர்வு எழுதிவிட்டு ஊர் திரும்புகிறார். அவரையும் இவ்வழக்கில் கைது செய்துள்ளது காவல்துறை," என்று ஹசீஃப் தெரிவித்தார்.


"இது போன்ற தவறுகளை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வது தானே ஊடக கடமை. அதை நாங்கள் சரியாகவே செய்துள்ளோம். நீதிபதியின் இத்தகைய கருத்து, ஊடக சுதந்திரத்திற்கு எதிராக அமைந்துள்ளது. எனவே, தமிழக அரசு இதில் தலையிட்டு சரி செய்ய வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. தமிழக அரசு அதை செய்யும் என்று நம்புகிறோம்," என்றார் ஹசீஃப்.


நீதிபதியின் கருத்து குறித்து 'ஜீவா டுடே' யூடியூப் சேனலின் உரிமையாளர் ஜீவாவிடம் பிபிசி தமிழுக்காக பேசிய போது, "நாங்களே முடிவெடுத்து எதையும் ஒளிபரப்பவில்லை. நடந்தவற்றைத்தான் ஒளிபரப்பினோம்," என்றார்.


ஜீவா

படக்குறிப்பு,

ஜீவசகாப்தன்


இது குறித்து விவரித்த அவர், "மாணவியின் மரணம் தொடர்பாக பலர் எழுப்பிய சந்தேகங்களைத் தான் நாங்கள் ஊடகங்களில் ஒளிப்பரப்பினோமே தவிர நாங்கள் எதனையும் முன்முடிவோடு அணுகவில்லை, மாணவியின் தாயார், உறவினர்கள் என பலரின் பேட்டியை ஒளிப்பரப்பினோம், அதே போல் தமிழக அரசால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவில் இடம்பெற்ற விசாரணை அதிகாரி சாந்தியின் பேட்டியை வெளியிட்டோம், இவை எவ்வகையில் வழக்கை பாதித்ததுள்ளது? நீதிபதியின் கருத்து ஊடகச் சுதந்திரத்திற்கும், பேச்சு சுதந்திரத்திற்கும் எதிரானது. அதனை தமிழக அரசு உரிய வகையில் கையாளும் என்று நம்புகிறேன்," என்றார்.


இந்த விவகாரத்தில் வழக்குரைஞர் மனோகரனிடம் பேசினோம்.


" ஒரு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும்போது, அதற்கு இணையாக ஒரு விசாரணை ஊடகங்களில் நடைபெற்றால், அது வழக்கின் போக்கை பாதிக்க வாய்ப்புள்ளது என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். கடந்த காலங்களில் பல நிகழ்வுகளில் பாதிப்படைந்தவர்களுக்கு பாதகமாக வழக்கு போன வரலாறு உண்டு, அதே போல் ஊடகங்களின் பங்களிப்பால் பல முக்கிய வழக்குகளில் நீதியும் கிடைத்துள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலாது," என்றார்.


"பல வழக்குகளில் நீதிபதிகள் ஊடக செய்திகளை உதாரணம் காட்டி நீதியும் வழங்கியுள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்திலேயே கருத்து சுதந்திரத்தை பற்றி வரையறுக்கப்பட்டுள்ள விதிகளுக்கு உட்பட்டு ஊடகங்கள் செயல்பட்டால், அவற்றை நீதிபதிகள் கண்டிப்பது தவறு. இன்றைய சூழ்நிலையில் அச்சு ஊடகங்கள் துவங்கி தொலைக்காட்சிகள் வரை பெரும்பாலானவை கார்பரேட் நிறுவனங்களின் வசம் சென்று விட்டன. ஓரளவிற்கு நேர்மையாக நடப்பது இது போன்று சுயாதீன டிஜிட்டல் ஊடகம் மட்டுமே. அதை முடக்கும் வகையில் நீதிபதியின் கருத்து அமைந்திருப்பது சட்டம் நமக்கு அளித்துள்ள கருத்து சுதந்திரத்திற்கு எதிரான ஒன்று தான்," என்று அவர் தெரிவித்தார்.


ஊடகங்கள் தவறு செய்தால் அதனை நெறிப்படுத்த உத்தரவிடும் கடமை நீதிமன்றங்களுக்கு உண்டு ஊடகங்களே கண்காணிக்கவே ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளை தலைவராக கொண்டு 1966ம் ஆண்டு தொடங்கிய Press council of India என்ற அமைப்பும் செயல்பட்டு வருகிறது, சில நேரங்களில் நீதிமன்றமும் இது போன்ற தவறான கருத்துகளை தெரிவித்து விடுகிறது. அதை சுட்டிக்காட்டும் பொறுப்பு ஊடகங்களுக்கும் நமக்கும் உண்டு என்பதை நாம் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும்" என்றார்.