மருதமுனை நெசவாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில்ஆராய்வு




 


மருதமுனை நெசவாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஹரீஸ் எம்.பியின் ஏற்பாட்டில் ஆராய்வு



நூருள் ஹுதா உமர். 


அம்பாறை மாவட்ட மருதமுனை பிரதேச நெசவாளர்கள், கைத்தறி உற்பத்தியாளர்கள் சமகாலத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்தாராயும் கலந்துரையாடல் ஒன்று கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலியின் தலைமையில் இன்று சனிக்கிழமை (27) இடம்பெற்றது.


திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் முன்வைத்த வேண்டுகோளின் பேரில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கலந்துகொண்டு நெசவாளர்கள், கைத்தறி உற்பத்தியாளர்கள் சமகாலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள், நூல் இறக்குமதி செய்வதில் உள்ள குளறுபடிகள், விலையேற்றத்தினாலும், அரசியல் நெருக்கடியினாலும் நெசவுத்துறை பாதிப்படைந்த விடயங்கள், எரிபொருள் தட்டுப்பாட்டினால் மூலப்பொருட்கள் பெறுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பில் நெசவாளர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.


இங்கு நெசவாளர்களிடம் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ; உற்பத்தி தொடர்பில் பொறிமுறை உருவாக்குவதற்கான நெறிமுறைகளை பிரதேச செயலகங்களினூடாக  உருவாக்குவது, நூல் இறக்குமதிக்கு அரச மானியங்கள் கோருவது போன்றவற்றுடன் ஜனாதிபதி,  அமைச்சர்கள் ஆகியோரை சந்தித்து இது தொடர்பில் பேச்சுக்கள் நடத்த தான் தயாராக உள்ளதாகவும், நெசவாளர்களின் பிரதிநிகளையும் இணைத்துக் கொண்டு உரிய துறையின் அதிகாரிகளை சந்தித்து தீர்வுக்கு வழிசமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். 


மேலும் உற்பத்திகளை சந்தைப்படுத்தல், நெசவுத்துறையை மேலும் மேம்படுத்தல் போன்ற விடயங்களை இங்கு ஆராய்ந்து நெசவாளர்களுக்கு இலாபம் கிடைக்கும் படி உற்பத்தி விலையை குறைப்பது எப்படி என்று ஆராயும் படி தெரிவித்த அவர் அரச வர்த்தக கூட்டுத்தாபணம் இது விடயத்தில் எவ்வாறு பங்களிக்கும் என்பது தொடர்பில் விளக்கினார். 


உற்பத்தி பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் ஆராய்ந்ததுடன் வர்த்தக அமைச்சர், புடகை கைத்தொழில் அமைச்சு ஆகியவற்றினூடாக எவ்வாறான முன்னெடுப்புக்களை செய்யலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்ததுடன் கல்முனை மாநகர சபை முதல்வர் ஏ.எம். றக்கிப் பிரதேச நெசவுத்துறையின் பிரச்சினைகளை முன்வைத்ததுடன் அவைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் இங்கு கருத்து தெரிவித்தார். 


இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கிப், மருதமுனையை பிரதிநிதித்துவப்படுத்தும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ். உமரலி, எம்.எஸ்.எஸ். நவாஸ், ஏ.எச்.ஏ. ழாஹிர் முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.எம். முஸ்தபா, பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜௌபர், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் நெளபர் ஏ பாவா, பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் எம்.ஏ. சப்ராஸ் நிலாம், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்த கொண்டனர்.