ரணில் – ராஜபக்ச அரசாங்கத்தின் அடக்குமுறையை உடனே நிறுத்து”




 


(க.கிஷாந்தன்)

 

“ரணில் – ராஜபக்ச அரசாங்கத்தின் அடக்குமுறையை உடனே நிறுத்துஎன்ற தொனிப் பொருளில் அட்டனில் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் மற்றும் ஒன்றிணைந்த மக்கள் இயக்கம் ஆகிய அமைப்புகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் என பெருமளவானோர் பங்கேற்றனர்.

 

அட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக இன்று (09.08.2022) மாலை இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

அவசரகால சட்டத்தை சுருட்டிக்கொள், பாராளுமன்றத்தை உடனே நிறுத்து, புதிய மக்கள் ஆணைக்கு இடமளி என்ற பதாதைகளை ஏந்தியவண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

பாராளுமன்றத்தை களைத்து புதிய மக்கள் கருத்துக்கு இடமளிக்க வேண்டும். அத்தோடு, கைதுகளையும், அநீதியான ஆட்கடத்தல்களையும் உடனடியாக இவர்கள் நிறுத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியதுடன், அவ்வாறு இல்லாவிட்டால் போராட்டம் தொடரும் எனவும் சூளுரைத்தனர். 

 

அத்துடன், கொழும்பு காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் இடம்பெறும் போராட்டத்துக்கு தமது முழு ஆதரவையும், மலையக மக்கள் சார்பில் வெளிப்படுத்தினர்.