( காரைதீவு சகா)
கிழக்கு மாகாண ஹொக்கி அணிகளுக்கிடையிலான போட்டியில் அம்பாறை மாவட்ட அணியான காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணி 8-7 என்ற கோல்களால் வெற்றிவாகை சூடி கிழக்கு மாகாண சாம்பியனாக மீண்டும் தெரிவாகியுள்ளது.
இதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக நான்கு தடவைகள் மாகாண சம்பியனாக காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணி தெரிவாகியுள்ளது.
இம் மாகாண மட்ட போட்டி நேற்று முன்தினம் கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் நடைபெற்றது.
முதல் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியும் திருகோணமலை மாவட்ட அணியும் மோதின. அதில் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் திருகோணமலை அணி வெற்றி பெற்றது.
நடப்பு சாம்பியனான அம்பாறை மாவட்ட அணி பை மூலம் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.
இரண்டாவதும் இறுதியுமான போட்டியில் திருகோணமலை மாவட்ட அணியும் அம்பாறை மாவட்ட அணியும் மோதின.
48 நிமிட இறுதிப்போட்டி முடிவில் இரண்டு அணிகளும் ஒரு கோல்களும் போடாமல் சம நிலையில் இருந்தன.
பெனால்டி தண்டனை உதை முறைமூலம் முதல் தொகுதியில் 4-4 பெற்று மீண்டும் சமநிலையில் இரு அணிகளும் இருந்தன.
பின்னர் இரண்டாம் தொகுதி அதாவது தனிநபர் தண்டனை உதைமுறைமூலம் 4-3 என்ற அடிப்படையில் அம்பாறை மாவட்ட அணி வெற்றி வாகை சூடியது.
மொத்தத்தில் இறுதியாக 8-7 கோல் வித்தியாசத்தில் அம்பாறை அணி அதாவது காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணி வெற்றி வாகை சூடியது .
இதன் மூலம் தொடர்ச்சியாக அம்பாறை மாவட்டத்திலும் ,கிழக்கு மாகாணத்திலும் நான்கு தடவைகள் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறது காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணி.
காரைதீவு பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் விஜயரெத்தினம் பாஸ்கரன் ஹொக்கி அணியுடன் சமுகமளித்திருந்தார்.
அம்பாறை மாவட்ட அணியை முற்றிலும் த.லவன் தலைமையிலான காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணி பிரதிநிதிப்படுத்துவதும்
சமகால அணிக்கு சந்துரு தலைவராக செயற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
நான்காவது தடவையாகவும் வெற்றி வாகை சூடி சாதனை படைத்தமையையிட்டு ஹொக்கி லயன்ஸ் அணியின் ஆலோசகர்களான வி.ரி.சகாதேவராஜா மா.சிதம்பரநாதன் தி.உமாசங்கரன் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் மாதத்தில் தேசிய மட்ட ஹொக்கி போட்டி கொழும்பில் நடைபெற இருக்கின்றது.
Post a Comment
Post a Comment