ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு ஒரு கோடியே 40 இலட்சம் பெறுமதியான நீர் வழங்கும் பவுசர்




 


வி.சுகிர்தகுமார்   

  ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு வழங்கப்பட்ட ஒரு கோடியே 40 இலட்சம் பெறுமதியான நீர் வழங்கும் பவுசர் சம்பிரதாயபூர்வமாக சேவையில் ஈடுபடுத்தப்படும் நிகழ்வு நேற்று மாலை கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தின் முன்பாக இடம்பெற்றது.

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண அமைச்சின் ஊடாக பிரதமர் தினேஸ் குணவர்த்தனவினால் கடந்த வாரம் பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரனிடம் கையளிக்கப்பட்ட நீர் வழங்கும் பவுசரின் சேவை ஆரம்ப நிகழ்வே இவ்வாறு நடைபெற்றது.

கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்று வருகின்ற ஆலய உற்சவத்தை முன்னிட்டு ஆலயத்திற்கான நீர் வழங்கும் பணியும் இதன் மூலம் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் த.கிரோஜாதரனின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் ஆரம்ப பூஜை வழிபாடுகளை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.கௌரிசங்கர் குருக்கள் நடாத்தி வைத்தார்.

நிகழ்வில் பிரதேச சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர் உள்ளிட்ட ஆலய நிருவாகத்தினரும் கலந்து கொண்டனர்.

இதன் மூலம் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களுக்கான குடிநீர் வழங்கும் பணி இலகுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இதனை வழங்கி வைத்த அரசாங்கத்திற்கும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சிற்கும் தவிசாளர் நன்றி தெரிவித்தார்.