நற்பிட்டிமுனை பொதுச்சந்தையின் அவலம்





 நற்பிட்டிமுனை பொதுச்சந்தையின் அவலம் குறித்து மாநகர சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 


நூருல் ஹுதா உமர் 


அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான நற்பிட்டிமுனை பொதுச்சந்தையின் அவலம் குறித்து மாநகர சபையின் சொத்துக்குப் பொறுப்பான மாநகரத்தின் ஆணையாளர் அறிந்திருந்தும் கண்மூடித்தனமாக நடந்து கொள்வதுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வை வழங்க முன்வராமல் இருக்கிறார் என நற்பிட்டிமுனை பொதுச் சந்தை வர்த்தகர்களும் ஊர் பொது மக்களும் குற்றம் சுமத்துகின்றனர். 


நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு தமிழ், முஸ்லிம் மக்கள் பரவலாக பாவித்துவரும் சந்தையின் நீர் தாங்கி பல மாத காலமாக உடைந்து சேதமடைந்துள்ளதால் மீன் சந்தை மற்றும் மல சல கூடம் கழுவி சுத்தம் செய்யப்படாமையால் துர்வாடை வீசுவதாகவும் தொற்று நோய் பரவும் ஆபத்து காணப்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். 


மேலும் ஒரு மாதத்துக்கும் மேலாக அங்குள்ள திண்மக்கழிவுகள் அகற்றப்படாமையினால் அங்கு தேங்கியுள்ள கழிவுகளால் பாரிய சூழல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. மாநகர முதல்வர், ஆணையாளர், இந்த ஊரை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர சபை உறுப்பினர் சீ. எம். முபீத் ஆகியோர் நற்பிட்டிமுனை மக்களின் பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற்றுத்தர முன்வரவேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.