பொதுமக்களுக்கு பெற்றோல் வழங்கும் போது அதிகாரிகளும் அதே வரிசையில் செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்





 வி.சுகிர்தகுமார்   

  ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் விற்பனை நிலையத்தில் ஒரு மாதத்திற்கு பின்னர் நேற்றிரவு  வாகன இறுதி இலக்கத்தின் அடிப்படையில் சுமூகமான முறையிலும் பெற்றோல் வழங்கப்பட்டது.
அக்கரைப்பற்று பொலிசாரின் மேற்பார்வையோடு  எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களால் பெற்றோல் விநியோகம் இடம்பெற்றது.
பிற்பகல் 3 மணியளவில் பெற்றோல் விநியோகம் ஆரம்பமான நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் ஜெனரேட்டர் வசதியுடன் மக்கள் நலன் கருதி பெற்றோல் வழங்க எரிபொருள் நிரப்பு நிலைய நிருவாகம் நடவடிக்கை எடுத்தமை சிறப்பாக அமைந்தது.
0 1 2 வாகன இறுதி இலக்கத்தினையுடைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படுவதற்கு நிருவாகம் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் அவர்களது அதிகராத்தை  தாண்டி வேறு சில இலக்க வாகனங்களுக்கும் பெற்றோல் வழங்கப்பட்டதை காண முடிந்தது.
இதேநேரம் சில அதிகார வர்க்கம் எரிபொருளை பெறுவதற்கு பல நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் பெண்களுக்கு என வரிசையும் பொலிசாருக்கு மட்டும் ஒரு வரிசை எனவும் பெற்றோல் வழங்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
குறித்த எரிபொருள் நிலையத்திற்கு ஒரு மாதகாலத்திற்கு மேலாக பெற்றோல் வழங்கப்படாத நிலையில் நேற்று வழங்கி வைக்கப்பட்ட 6600 லீற்றரும் விநியோகப்பட்ட நிலையில் நீண்ட வரிசையில் இரு நாட்கள் காத்திருந்த பொது மக்கள் பெற்றோல் கிடைக்கப்பெறாது வேதனையுடன் திரும்பி சென்றதை காண முடிந்தது.
மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கு 1500 ரூபா வீதமும் ஆட்டோவிற்கு 2000 ரூபாவிற்கும் கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு 7000 ரூபா வீதமும் பெற்றோல் விநியோகம் இடம்பெற்றது.
  ஆயினும் பெற்றோல் கிடையாது கவலையுடன் கலைந்து சென்ற பொதுமக்கள் இரு முறை பெற்றோல் பெறமுடியாத வகையில் ஏதாவது ஒரு சிஸ்டத்தை அமுல்படுத்தவில்லை எனில் தொடர்ந்தும் தாங்கள்; பாதிக்கப்படுவோம் எனவும் பொதுமக்களுக்கு பெற்றோல் வழங்கும் போது ஏனையவர்கள் உள்வாங்கப்படுவதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.