ஆயிரம் பேருக்கு அன்னதானம்





வி.ரி.சகாதேவராஜா))


வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் இன்றிலிருந்து (11)ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இன்று(11) திங்கட்கிழமை ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவ கொடியேற்றம்  ஆலய பிரதம குரு  சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையில்  இடம்பெற இருக்கின்றது.

ஆலய பரிபாலன சபை தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் கூறுகையில்..

 இன்று கொடியேற்ற தினத்தில் இருந்து தினமும் பகல் வேளையில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

 தொடர்ச்சியாக 18 நாட்கள் வழங்கப்பட்டு 28ஆம் தேதி சமுத்திர தீர்த்த உற்சவத்துடன் அன்னதான நிகழ்வு நிறைவு பெற இருக்கிறது.

 ஆஸ்திரேலியாவில் வாழும் பரோபகாரி கனகலிங்கம் அவர்கள் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் அன்னதானம் வழங்கவென ஆலயத்தில் அமைத்து கொடுத்த திருமூலர் திருமடத்திலே அன்னதான நிகழ்வு தொடர்ச்சியாக தினமும் இடம் பெற இருக்கின்றது.

 இதற்கென்று அவர் அவுஸ்திரேலியா விலிருந்து ஆயிரம் எவர்சில்வர் பீங்கான்களையும் அனுப்பி வைத்திருக்கின்றார்.

 இந்த காலப்பகுதியிலே ஆலயத்திற்கு வரும் கதிர்காம பாதயாத்திரை அடியார்கள் மற்றும்  ஊர் மக்கள் ,அடியார்கள் அனைவரும் இந்த பகல் அன்னதானத்திலே கலந்து கொள்ளலாம்என்று தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் மேலும் தெரிவித்தார்.

 அதேவேளை, இந்த அன்னதானநிகழ்விற்கு யாராவது உதவி செய்ய முன் வந்தால் தாராளமாக உதவி செய்யலாம். அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டு தனித்தனியாக பற்றுச்சீட்டு வழங்கப்படும் .அதேவேளை அவர்களது பெயர் விவரமும் whatsapp குழுவில் பகிரங்கமாக அறிவிக்கப்படும் என்றும், ஆலய அன்னதான குழுவினரே இதனை தொடர்ந்து மேற்கொள்வார்கள் என்றும் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் தெரிவித்தார்.