புகையிரத நிலையங்களில் பயணச்சீட்டு வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்





 (க.கிஷாந்தன்)

 

நேற்று (23) மாலை 6 மணி முதல் அனைத்து புகையிரத நிலையங்களிலும் பயணச்சீட்டு வழங்கும் வழமையான நடவடிக்கைகளில் இருந்து விலகுவதற்கு நிலைய அதிபர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

 

அந்தவகையில், மலையக புகையிரத நிலையங்களிலும் அதிபர்கள் பயணச்சீட்டு வழங்கும் வழமையான நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்தனர்.

 

இதனால் பயணிகள் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்திருந்தமையை காணக்கூடியதாக இருந்ததோடு, கடும் நெரிசல் ஏற்பட்டு, பயணிகள் மிகவும் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்ய வேண்டியிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.


புகையிரத கட்டண திருத்தத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய தவறியமையினால் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.


இந்த தொழில்சார் நடவடிக்கையானது 48 மணித்தியாலங்களுக்கு அமுல்படுத்தப்படும் எனவும், தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால், தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.