(க.கிஷாந்தன்)
கொழும்பு - காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அட்டனில் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“கோல்பேஸ் போராட்டகாரர்களை தாக்கியவர்களை எதிர்ப்போம்” என்ற தொனிப் பொருளின் கீழ் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் என பலரும் பங்கேற்றனர்.
அட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக நேற்று மாலை (22.07.2022) இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதிகார பேராசை கொண்ட ரணில் ராஜபக்சவினால் கோல்பேஸ் போராளிகளை தாக்கியதை கண்டிக்கின்றோம், கொலைக்கார பட்டலந்த அராஜகவாதியை விரட்டியடிப்போம், கோல்பேஸ் மிலேச்ச தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம், நாட்டினுள் மீண்டும் பட்டலந்த ஒன்றை கொண்டு வர வேண்டாம் என்ற பதாதைகளை ஏந்தியவண்ணம், கறுப்பு கொடிகளை பிடித்தவாறு, கோஷங்களை எழுப்பியவாறு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதில் சொல்லி ஆக வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியதுடன், அவ்வாறு இல்லாவிட்டால் போராட்டம் தொடரும் எனவும் சூளுரைத்தனர்.
Post a Comment
Post a Comment