தகவலறியும் சட்டத்தில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை




 


நூருல் ஹுதா உமர்


கல்முனை மாநகர சபையில் போலியான சிட்டுக்களையும், இல்லாத நிறுவனங்களின் பேரில் போலியான ஆவணங்களையும் தயாரித்து ஊழல் மோசடி இடம்பெற்றுவருவதாக மருதமுனை பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் இஸட்.ஏ. நௌஷாட் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், கல்முனை மாநகர சபையில் பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிட்டு KMC/W2/PN28/37/22 எனும் பதிவிலக்கத்தை உடைய 310 A , பாக்கியத்துஸ் ஸாலிஹாத், பெரியநீலாவணை 01 எனும் முகவரியில் நபா ஹோல்டிங்ஸ் எனும் பெயரை உடைய நிறுவனம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போலியான நிறுவனமாக காணப்படுகின்றது. அவர்கள் அலுவலக முகவரியாக காட்டியிருப்பது வெற்றுக்காணியொன்றாகும். இந்த நிறுவனத்தின் பெயரில் பல்வேறு கொடுக்கல் வாங்கல்களை கல்முனை மாநகர சபை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பில் கல்முனை மாநகர சபையில் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டபோது இப்படி ஒரு நிறுவனம் கல்முனை மாநகர சபையில் பதிவுசெய்யப்பட வில்லை என 2022.06.16 அன்று உத்தியோகபூர்வமாக தகவல் தரும் அதிகாரியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.  குறித்த நிறுவன பற்றுசீட்டுக்களில் பதிவுசெய்யப்பட்டதாக KMC/W2/PN28/37/22 எனும் பதிவிலக்கத்தை அச்சிட்டுள்ளனர். குறித்த நிறுவன பற்றுசீட்டுக்களை ஆராய்ந்து கல்முனை மாநகர சபை உயரதிகாரிகள் கையெழுத்திட்டு நிதி விடுவித்துள்ளனர். இதன்மூலம் பாரியளவிலான மோசடிகள் கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றுவருவது அப்பட்டமாக தெரிகிறது. ஒன்றுக்கு ஒன்று முரணான தகவல்களை வழங்கி கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றுவரும் மோசடிகளை கல்முனை மாநகர அதிகாரிகள் மறைமுகமாக ஏற்றுக்கொள்கின்றனர்.

குறித்த நபா ஹோல்டிங்ஸ் எனும் பெயரை உடைய நிறுவனம் கல்முனை மாநகர முதல்வரின் நெருங்கிய உறவினரின் பெயரில் இயங்கி வருவதாக அறிய முடிகிறது. இது தொடர்பில் கல்முனை பிரதேச செயலகத்தில் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டபோது இப்படி ஒரு நிறுவனம் கல்முனை பிரதேச செயலகத்தில் KDS/1457 எனும் இலக்கத்தில் மு.ற.ரத்திஸ் நபா என்பவரின் பெயரில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக கல்முனை பிரதேச செயலக தகவல் அதிகாரி மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித கட்டிடமோ பெயர்பலகைகளோ இல்லாத நிலையில் எப்படி இது சாத்தியமாகியது. இந்த விடயத்தின் மூலம் அரசியலமைப்பு மூலம் உறுத்திப்படுத்திய இலங்கையின் சட்டம், அரச அதிகாரிகளுக்கான விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதுடன் அதிகார துஸ்பிரயோகம் இடம்பெற்றுள்ளமை அப்பட்டமாக தெரிகிறது.

இந்த விடயத்தின் மூலம் பொதுமக்களின் பல லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளமை தெரியவருகிறது. கல்முனை மாநகர ஆணையாளர், கணக்காளர், தொழிநுட்ப உத்தியோகத்தர் எனப்பலரும் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள இந்த விடயமானது மிகவும் பாரதூரமானது. அவர்களே முழுமையாக இந்த விடயத்திற்கு பொறுப்புக்கூறவேண்டியுள்ளது. இது தொடர்பில் அண்மையில் கல்முனை மாநகர சபையில் கணக்காய்வு விசாரணை ஒன்றும் முன்னெடுக்கப்பட்டதாக அறிகிறேன். இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டியது யார்? என கேள்வியெழுப்பியுள்ளார்.