பாறுக் ஷிஹான்
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள ஆலங்குளம் ஆரம்ப வைத்தியசாலை நேற்று வியாழக்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவிலுள்ள இவ்வைத்தியசாலை 1994ஆம் ஆண்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டு, இயங்கி வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக புனரமைப்போ அடிப்படை வசதிகளோ எதுவுமில்லாமல் இருந்தமையால் மருத்துவ சேவையின்றி, கைவிடப்பட்டிருந்தது. இதனால் இப்பகுதி மக்கள் தமது மருத்துவ தேவைகளுக்காக நீண்ட தூரம் பயணம் செய்து, வெளியூர் வைத்தியசாலைகளுக்கே செல்ல வேண்டியிருந்தது.
இந்நிலையில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை எடுத்துக் கொண்ட அயராத முயற்சி காரணமாக சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் இவ்வைத்தியசாலை அனைத்து அடிப்படை வசதிகளுடனும் துரிதமாக புனரமைப்பு செய்யப்பட்டு, மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டிருக்கிறது. இங்கு 24 மணி நேரமும் மருத்துவ சேவை இடம்பெறும் எனவும் இதனால் இப்பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2000 குடும்பத்தினர் பயனடைவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.எம்.முபாரிஸ் தலைமையில் இடம்பெற்ற இதன் திறப்பு விழாவில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.முரளிதரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வைத்தியசாலையின் சேவைகளை ஆரம்பித்து வைத்தார்.
அத்துடன் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் எம்.ஐ.எம்.தொளபீக், திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எம்.எம்.வாஜித், திட்டமிடல் வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சி.எம்.மாஹிர், மாகாண சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் வி.ரி.சர்மா, பொறியியலாளர் எம்.எம்.எம்.ஹக்கீம் உள்ளிட்டோரும் அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.
இதன்போது இவ்வைத்தியசாலையினால் முன்னெடுக்கப்பட வேண்டிய மருத்துவ சேவைகள், அதற்காக ஏற்படுத்தப்பட வேண்டிய மேலதிக வசதிகள், தேவையான மருத்துவ உபகரணங்களை தருவித்தல் மற்றும் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடலும் இடம்பெற்றது.
Post a Comment
Post a Comment