பேச்சுவார்த்தை




 


மருதமுனை பிரதேச வைத்தியசாலை மேம்பாட்டு விடயங்கள் தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் பேச்சுவார்த்தை !


நூருல் ஹுதா உமர் 


மருதமுனை பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்தியதிகாரி டாக்டர் ஏ.எல்.எம். மிஹ்லார் தலைமையிலான வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினருக்கும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பும், வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடலும் புதன்கிழமை (22) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது. 


கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு சிகிச்சை வழங்கும் நோக்கில் கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்ட சிகிச்சை நிலையமாக வெற்றிகரமாக தொழிற்பட்டு நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் பல நூற்றுக்கணக்கானோருக்கு சிகிச்சையளித்த  இந்த வைத்தியசாலையின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள், வளத்தேவைகள், வைத்தியசாலை மேம்பாட்டு வேலைத்திட்டங்கள், இருக்கும் வளங்களை பயன்படுத்தி மக்களுக்கு உயர்ந்த சுகாதார சேவைகள் வழங்குவது தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் விரிவாக இங்கு ஆராயப்பட்டது. 


இந்த கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் எம்.பி.அப்துல் வாஜித், கல்முனை பிராந்திய திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம். மாஹீர், வைத்தியசாலை அபிவிருத்தி குழு உபதலைவர்களான இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட பீடாதிபதி கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன், உள்ளுராட்சி மன்றங்களின் செயற்திட்ட அதிகாரி எம்.ஐ.எம். வலீத், செயலாளர் எம்.பி. அறபாத், பொருளாளர் தொழிலதிபர் எம்.எச்.எம். தாஜுதீன், வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் நிர்வாக உறுப்பினர்களான எம்.பி முஹம்மட் ஷா, எம். நிஹ்மதுல்லா உட்பட பலரும் கலந்து கொண்டனர். 


வைத்தியசாலையின் அபிவிருத்தி, மேம்பாட்டு வேலைத்திட்டங்களுக்கு என்னுடையதும், எமது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினதும் உதவிகள், ஆலோசனைகள், அர்ப்பணிப்புக்களை எப்போதும், எந்த சூழ்நிலையிலும் வழங்க தயாராக இருப்பதாக மருதமுனை பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினருக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதியளித்தார்.