இருநாட்கள் காத்திருக்கும் வாகன உரிமையாளர்கள்





வி.சுகிர்தகுமார்   




எரிபொருளுக்கான கேள்விகள் அதிகரித்துள்ள நிலையில் எரிபொருள் வழங்கும் சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசைகளில் மக்கள் காத்திருப்பதை காண முடிகின்றது.
ஆலையடிவேம்பு பல நோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று(15) காலை முதல் டீசலை பெற்றுக்கொள்வதற்காக உழவு இயந்திரங்கள் உள்ளிட்ட கனரக வாகன உரிமையாளர்கள் நீண்ட வரிசைகளில் வெயில் மழைக்கு மத்தியிலும் காத்திருந்திருப்பதை அவதானிக்க முடிந்தது.
பலர் தங்களது வாகனங்களுடன் இரவு வேளையிலும் குறித்த இடங்களில் தங்கியிருந்து டீசலை எதிர்பார்த்தவண்ணம் காத்திருக்கின்றனர்.
குறித்த நிலையத்தினூடாக டீசல் வழங்கப்பட்டு ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில் பெய்துவரும் மழைக்கு மத்தியிலும் ஒரு கிலோமீற்றருக்கும் அப்பால் நீண்ட வரிசையில் வாகன உரிமையாளர்கள் பொறுமையுடன் காத்திருக்கின்றனர்.
இதேநேரம் பெற்றோல் வழங்கப்பட்டும் ஒரு வாரகாலம் கடந்த நிலையில் மக்கள் பெற்றோலுக்காவும் காத்திருப்பதுடன் அதிகமானவர்கள் துவிச்சக்கரவண்டியை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஆயினும் பெற்றோல் இன்றி அரச அலுவலர்களும் கடமைக்கு செல்வதை தவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எது எவ்வாறாயினும் தொடர்ச்சியாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசைகளில் மக்கள் மீண்டும் காத்திருக்கும் நிலையானது பொதுமக்கள் மத்தியில் விசனத்தை உண்டுபண்ணியுள்ளதுடன்  மக்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது