அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினால் சுற்றிவளைப்பு-




 




பாறுக் ஷிஹான்



அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினால்   அரிசி களஞ்சியசாலை வர்த்தக நிலையங்கள்  மீது திடீர் சுற்றிவளைப்பு  இன்று (13)  மேற்கொள்ளப்பட்டது.
 
பொது மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற  முறைப்பாட்டிற்கமைய அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி சாலிந்த பண்டார நவரத்ன வழிகாட்டலில் அம்பாறை  தலைமைக் காரியாலயத்திலிருந்து வருகை தந்த நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின்  புலன் விசாரணை அதிகாரிகளினால் சவளக்கடை நற்பிட்டிமுனை சாய்ந்தமருது  பிரதேசத்தில் இவ்வாறான  திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
 
இதன் போது புலன் விசாரணை அதிகாரிகளினால் நெல் அரிசி களஞ்சியசாலை அரிசி விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் என்பன பரிசோதணை மேற்கொள்ளப்பட்டு எச்சரிக்கையுடனான  அறிவுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் வழக்கு தாக்கல் நடவடிக்கையும்  முன்னெடுக்கப்பட்டது.

இந்நடவடிக்கையின் போது அரிசி பைகளுக்கு  விலை குறிப்பிடப்படாமை கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசினை விற்பனை செய்தமை  தான்தோன்றித்தனமாக விலை பொறித்து விற்பனை செய்தமை  உரிய அனுமதி இன்றி விலைகளில் மாற்றம் செய்தமை   விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில்  சவளக்கடை   நற்பிட்டிமுனை  சாய்ந்தமருது பகுதிகளில் ஐவருக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன் எச்சரிக்கையுடனான அறிவூட்டலும் உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்டது.

இன்று  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது  அரிசி வகைகளை  களஞ்சியப்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட விலையை மாற்றி விற்பனை செய்த  வர்த்தகர்களுக்கு  எதிராக எதிர்வரும் ஜுன் மாதம் 23 ஆந் திகதி  நீதிமன்றதினுடாக வழக்கு தொடரப்படவுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தின் ஏனைய பகுதிகளான  நிந்தவூர் அக்கரைப்பற்று ஒலுவில் பகுதியிலும் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட  பின்னர் மக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில்  அரிசி வகைகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.