தேவையான பொருட்களை நாட்டுக்கு கொண்டு வர அனுமதித்த பிரதமர் ரணிலுக்கு நன்றி : பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகளின் கூட்டணி.
நூருல் ஹுதா உமர்
திறந்த கணக்கில் தேவையான பொருட்களை நாட்டுக்கு கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்ற பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகளின் கூட்டணி விடுத்த வேண்டுகோளை ஏற்று திறந்த கணக்கின் மூலம் நாட்டுக்கு எவரும் பொருட்களை கொண்டு வர அனுமதித்தமைக்காக மேற்படி கூட்டணி சார்பில் ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவர் முபாறக் மௌலவி அவர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கையில் அண்மையில் இலங்கை மக்கள் தேசிய கட்சியின் தலைவர் என்.விஷ்ணுகாந்தனின் ஏற்பாட்டில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகளுக்கும் ஐ தே க பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டாரவுக்குமிடையில் ஸ்ரீகோத்தாவில் சந்திப்பு நடை பெற்றது. இதன் போது நாட்டில் டொலருக்கான தட்டுப்பாடு நிலவுவதால் வங்கிகள் டொலர் தர மறுப்பதால் உணவுப்பொருட்களை இறக்குமதி செய்ய இறக்குமதியாளர்களால் முடியவில்லை. இதன் காரணமாக உணவுப்பொருட்களுக்கு பெரும் பஞ்ச நிலவுகிறது.
இதனை தீர்க்குமுகமாக வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் வெளிநாட்டில் இருந்தே பணம் செலுத்துவதன் மூலம் உள் நாட்டிலிருக்கும் ஒருவர் நேரடியாக இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என மேற்படி சந்திப்பில் கலந்து கொண்ட கட்சித்தலைவர்கள் ஆலோசனை கூறினர். இதனை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக ஐ தே க செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்திருந்தார்.
மேற்படி சந்திப்பில் இலங்கை மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் என். விஸ்னுகாந்தன், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் துஸ்யந்த் மணலிங்கம், முற்போக்கு ஜனதா சேவக கட்சியின் உப தலைவர் இந்திக்க சூரியராச்சி, ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் மௌலவி ஸ்ரீடெலோ சார்பில் அதன் பொதுச்செயலாளர் பி. உதயராசா, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் சார்பில் அதன் உப தலைவர் என். குமார குருபரன், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் இ.தம்பையா, ஐக்கிய இலங்கை முன்னணியின் தலைவர் ஜகத் கருணாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment