ஒலுவில் மீன்பிடி துறைமுகம் மீள ஆரம்பம்





 நூருல் ஹுதா உமர்


ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் செயற்பாடுகளை கடற்றொழில் வள அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா நாளை புதன்கிழமை காலை சம்பிரதாயபூர்வமாக மீள ஆரம்பித்து வைக்கின்றார்.முதல் கட்டமாக மீன் பதனிடும் தொழில் கூடங்கள் போன்றவை மீனவ சமூகத்தின் பாவனைக்கு அமைச்சரால் கையளித்து வைக்கப்படுகின்றன.

இதற்காக அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டு வருகின்ற அமைச்சர் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க கொழும்புக்கு அவசரமாக செல்ல வேண்டி இருப்பதால் மிக முக்கியமான நிகழ்வுகளில் மாத்திரம் பங்கேற்கின்றார் என்று அறிய கிடைத்து உள்ளது. 2013 ஆம் ஆண்டு ஒலுவிலில் வர்த்தக துறைமுகம் அப்போதைய ஜனாதிபதியும், துறைமுக அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஸவால் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் ஒரு வர்த்தக கப்பல்கூட ஒலுவில் துறைமுகத்துக்கு இது வரை வரவே இல்லை.

பல மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகத்தை பராமரிப்பதற்கு துறைமுக அபிவிருத்தி அதிகார சபை மாதாந்தம் 56 இலட்சம் ரூபாய் வரை செலவிட நேர்ந்தது. இந்நிலையில் கடற்றொழில் வள அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தாவின் பகீரத முயற்சிகளை தொடர்ந்து துறைமுக அமைச்சு, கடற்றொழில் வள் அமைச்சு ஆகியன கூட்டாக அண்மையில்  சமர்ப்பித்த அமைச்சரவை யோசனை மூலமாக கடற்றொழில் அமைச்சின் பொறுப்பில் ஒலுவில் துறைமுகம் வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது மீனவ உறவுகளுக்கு பெருமகிழ்ச்சியை தருகின்ற நற்செய்தி ஆகும்.

இதே நேரத்தில் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் காரைதீவையும் அண்டிய பிரதேசங்களையும் சேர்ந்த மீனவ உறவுகளின் பிரச்சினைகளை அமைச்சரின் மேலான கவனத்துக்கு கொண்டு வருகின்ற முன்னெடுப்புகளில் ஈடுபட்டு உள்ளார்.

அவர் இது தொடர்பாக கடந்த நாட்களில்  அமைச்சருடன் தொலைபேசியில் உரையாடினார். காரைதீவிலும், அண்டிய பிரதேசங்களிலும் ஆழி பேரலை அனர்த்தத்துக்கு பின்னர் கடல் ஓரங்களில் பிரமாண்டமான கற்பாறைகள் பரந்த அளவில் நிலை கொண்டு எழுந்து உள்ளன.இதனால் இங்கு பாரம்பரிய கரைவலை மீன்பிடியை மேற்கொள்வது பாரிய சவாலாக மாறி உள்ளது. அதாவது கற்பாறைகள் கிழித்து வலைகள் அறுந்து விடுகின்றன.