ஆப்கானிஸ்தான். உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு..!





 ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 280 மக்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நிலநடுக்கம் காரணமாக 600 ற்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் 6 தசம் 1 ரிக்டெர் அளவில் நிலநடுக்கம்  பதிவு செய்யப்பட்டுள்ளது.

 குறித்தப் பகுதிகளில் இன்று அதிகாலை இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பக்திகா மாகாணத்தில் வீடுகள் இடிந்துகிடப்பதையும், காயமடைந்தவர்கள் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்படுவதையும் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.


ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்

பட மூலாதாரம்,AFGHAN GOVERNMENT NEWS AGENCY

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைகளுக்குள் சுமார் 500 தூரத்துக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது என ஐரோப்பிய மத்தியத்தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் கூறியதாக ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அதை நேரில் உணர்ந்தவர்களை மேற்கோள் காட்டி அந்த மையம் கூறியுள்ளது.

"துரதிஷ்டவசமாக கடந்த இரவு பக்திகா மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான ஆப்கன் மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் பல வீடுகளையும் அழித்துள்ளது." என அரசு செய்தி தொடர்பாளர் பிலால் கரிமி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

"மேலும் பேரழிவு ஏற்படாமல் தடுப்பதற்கு, உதவி முகமைகள் தங்களின் குழுக்களை அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

நிலநடுக்கத்தின் தீவிரம் என்ன?

காபூலில் இருந்து 182 கி.மீ. தொலைவிலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 334 கி.மீ. தொலைவிலும், இந்திய நிர்வாகத்தில் உள்ள ஜம்மு காஷ்மீரின் ரஜௌரியில் இருந்து 445 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் 6.1 அளவில் பதிவானதாக இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்திய நேரப்படி ஜுன் 22-ம் தேதி அதிகாலை 2.24 மணிக்குப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையம் பாகிஸ்தானில் இடம் பெற்றதாகவும் குறிப்பிடுகிறது அந்த நிலநடுக்கவியல் மையம்.

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள Khost நகரில் இருந்து சுமார் 44 கிலோ மீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.