பாறுக் ஷிஹான்
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மட்டுப்படுத்த நிலையில் எரிபொருள் வழங்கப்படுவதனால் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முழுமையாக மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
சுமார் 2 முதல் 5 கிலோமீட்டர் வரை நிரையாக தத்தமது வாகனங்கள் உடன் அதிகாலை முதல் மாலை இரவு என காத்திருந்து எரிபொருளை பெற்றுச்செல்வதுடன் மற்றுமொரு தொகுதியினர் எரிபொருள் தீர்வதனால் ஏமாற்றத்துடன் வீடு திரும்புவதை அவதானிக்க முடிகின்றது.
மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் அம்பாறை மாவட்டத்திற்கான எரிபொருட்கள் சுழற்சி முறையில் வருவதுடன் இணைய வழியூடாக மக்கள் அறிந்து குறிப்பிட்ட எரிபொருள் நிலையத்தை வந்தடைகின்றனர்.
அத்துடன் குறித்த எரிபொருள் நிலையங்களில் எவ்வித ஒழுங்கமைப்புகள் இன்றி மக்கள் அதிகளவாக குவிந்து காணப்படுவதனால் எரிபொருள் விநியோகம் சீரற்ற முறையில் வழங்கப்படுகின்றது.இதனால் சில இடங்களில் பொதுமக்கள் எரிபொருள் ஊழியர்களிடையே முரண்பாடுகள் உருவாகின்றன.மேலும் இதனை தொடர்ந்து இராணுவம் பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கமைய அவ்விடத்தில் இருந்து பொதுமக்கள் அகன்று செல்வதை தினமும் காண முடிகின்றது.
மேலும் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சாய்ந்தமருது , நிந்தவூர், சம்மாந்துறை , அக்கரைப்பற்று , மருதமுனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி ,போன்ற பிரதேசங்களில் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருட்கள் தீர்ந்துள்ளமையினால் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதுடன் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
இதேநேரம் கல்முனை, மருதமுனை, எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் டீசல் கொள்வனவு செய்வதற்காக வரிசையில் வாகனங்கள் காத்துக்கொண்டு இருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
நாடளாவிய ரீதியில் இவ்வாறான நிலையில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்துள்ளதுடன் மாற்று ஏற்பாடுகள் ஏதுமின்றி மக்கள் பலர் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதை விட எரிபொருள் பற்றாக்குறையினால் அநேகமான இடங்களில் துவிச்சக்கரவண்டி பாவனையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. மேலும் மின்தடை ஏற்பட்ட நிலையில் மூடப்பட்டுள்ளதுடன் மக்களின் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. கல்முனை சம்மாந்துறை சாய்ந்தமருது பகுதியில் எரிபொருள் நிலையங்களில் குழப்பங்களை உருவாக்க முயன்ற நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
Post a Comment
Post a Comment