பாறுக் ஷிஹான்
வீடொன்றில் இருந்த பல இலட்சம் பெறுமதியான மின் உபகரணங்கள் மற்றும் பொருட்களை கொள்ளையிட்ட மூவரை 24 மணிநேரத்தினுள் சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதி வீடொன்றில் கடந்த 08 ஆம் திகதி உபகரணங்கள் பல களவாடப்பட்டுள்ளதுடன் வீட்டின் உரிமையாளர் தனிப்பட்ட தேவை நிமித்தம் கொழும்பிற்கு சென்றிருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டு கடந்த 15.06.2022 புதன்கிழமை அன்று சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதற்கமைய உரிமையாளர் வழங்கிய தகவலுக்கமைய பொலிஸாருடன் பொதுமக்கள் இணைந்து மேற்குறித்த சந்தேக நபர்கள் களவாடப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.இந்நடவடிக்கையி ன் போது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிகாட்டலுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பதில் பொறுப்பதிகாரி ஜனோசன் தலைமையில் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் குமாரசிங்க (25955) பொலிஸ் உத்தியோகத்தர் பரீட்(76361) உள்ளிட்ட குழுவினர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினால் இன்று(16) சந்தேக நபர்கள் மூவரும் கைதாகினர்.
இவ்வாறு கைதான சந்தேக நபர்களில் 28 வயதானவர் பிரதான சந்தேக நபர் எனவும் ஏனைய இரு சந்தேக நபர்கள் களவாடப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும் கைதான மூன்று சந்தேக நபர்களையும் இன்றைய தினம்(16) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போது பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் பல அதிகரித்துள்ளதாகவும் எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அவ்வாறு திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றிருப்பின் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.
Post a Comment
Post a Comment