(க.கிஷாந்தன்)
மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி அட்டன் நகரின் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக மக்கள் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த நிரப்பு நிலையத்திற்கு கடந்த (05)ம் திகதி 6600 லீற்றர் மண்ணெண்ணெய் கிடைத்துள்ளதுடன், அந்த எரிபொருளை குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்துவிட்டு, வரிசையில் கடைசியில் காத்திருந்த பெருந்தொகையான மக்களுக்கு அன்றைய தினம் மண்ணெண்ணெய் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் இன்றைய தினம் (07.06.2022) மண்ணெண்ணெய் கிடைக்கும் என எரிபொருள் நிலைய ஊழியர்களால் தெரிவித்ததையடுத்து, அன்றைய தினம் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதனையடுத்து, இன்றைய தினம் எரிபொருள் நிலையத்திற்கு வருகை தந்த மக்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் இல்லை என இன்று சம்மந்தப்பட்டவர்களால் தெரிவித்ததையடுத்து, ஆவேசமடைந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மண்ணெண்ணெய் விநியோகம் செய்வதற்கு முறையான முறைமை ஏற்படுத்தக் கோரி இன்று காலை முதல் மண்ணெண்ணெய்க்காக வரிசையில் நின்ற சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் எரிபொருள் நிலைய பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பிரதான வீதியை மறிக்க வேண்டாம் என தெரிவித்த பொலிஸாரின் கோரிக்கையை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் நிராகரித்தனர். பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம் காரணமாக போக்குவரத்தும் ஸ்தம்பிதமாகியுள்ளது. குறிப்பாக அட்டன் – நுவரெலியா, அட்டன் - கொழும்பு, அட்டன் – கண்டி போன்ற பிரதான வீதியினூடான போக்குவரத்து பல மணி நேரம் ஸ்தம்பிதமாகியுள்ளது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடதக்கது.
Post a Comment
Post a Comment