சாய்ந்தமருது பிரதேச சுகாதார நிலைகள் தொடர்பில் ஆராயும் உயர்மட்ட கலந்துரையாடல் !






நூருள் ஹுதா உமர்


சாய்ந்தமருது பிரதேச சுகாதார நிலைகள் தொடர்பில் ஆராயும் உயர்மட்ட கலந்துரையாடல் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ. எல்.எம். நியாஸ் தலைமையில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்றது. 


இந்த கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ், திட்டமிடல் வைத்திய அதிகாரி எம்.சி.எம். மாஹிர், தொற்றா நோய் தடுப்பு வைத்திய அதிகாரி, கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சத் காரியப்பர், சாய்ந்தமருது உலமா சபை தலைவர், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக அலுவலர், மாநகர சபை உறுப்பினர்கள், மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 


இதன்போது திண்மக்கழிவகற்றல் தொடர்பிலும், வடிகான்களின் முறையற்ற பராமரிப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன் கல்முனை மாநகர சபையின் பொறுப்பற்ற தன்மையினாலும், அசமந்த போக்கினாலும் மாநகர மக்கள் எதிர்நோக்கும் நோய் நிலைகள், ஆபத்துக்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு அது தொடர்பில். நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராயப்பட்டது. எல்லா திணைக்களங்களுடனும் புரிந்துணர்வுடன் செயற்பட்டு மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதனால் மாநகர சபைக்கு எதிராக வழக்குத்தாக்கள் செய்யாமல், சட்டநடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கின்றோம். தேவை ஏற்பட்டால் அதையும் செய்ய தயாராக இருக்கின்றோம். மக்களின் சுகாதாரம் மீது எப்போதும் கரிசனை செலுத்த வேண்டும் என்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் இங்கு தெரிவித்தார்.


கல்முனை மாநகர சபை முதல்வர், ஆணையாளர் ஆகியோர் உரிய வசதிகளை ஏற்படுத்தி தந்தால் இந்த பிரச்சினைகளை தீர்க்க தயாராக இருக்கிறோம். மாநகர ஊழியர்கள் வேறு பணிக்கு அமர்த்தப்படுவதனால் மாநகர சபை வேலைகளை சீராக செய்ய முடியாதுள்ளது. மாநகர சபையில் நிர்வாக பிரச்சினைகள் மலிந்து காணப்படுவதனால் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாத நிலை உள்ளது என்று கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சத் காரியப்பர் சபைக்கு தெரிவித்தார். இந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் கல்முனை மாநகர சபை முதல்வர், ஆணையாளர் அல்லது அவர்களின் சார்பில் யாரும் கலந்து கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.