(சுகிர்தகுமார் )
ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் விற்பனை நிலையத்தில் நேற்று மாலை பெற்றோல் வழங்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து ஒன்று கூடிய நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரின் தலையீட்டின் காரணமாக வழங்கப்பட்டது.
நேற்று(07) காலை முதல் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக பெற்றோல் வழங்கும் செயற்பாடுகள் சுமூகமான முறையில் இடம்பெற்றது.
நேற்று(07) காலை முதல் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக பெற்றோல் வழங்கும் செயற்பாடுகள் சுமூகமான முறையில் இடம்பெற்றது.
இருப்பினும் நேற்று பிற்பகல் 3 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் காரணமாக பெற்றோல் வழங்கும் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டது. ஆயினும் 5 மணியளவில் மின்சாரம் கிடைக்கப்பெற்றதும் பெற்றோலை வழங்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அத்தியாவசிய தேவைக்கான பெற்றோல் மாத்திரம் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்து பெற்றோல் வழங்க எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் மறுத்தனர்.
இதனால் சற்று குழப்ப நிலை ஏற்பட்டதுடன் அவ்விடத்திற்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் பொதுமக்களினால் அழைக்கப்பட்டார். அவ்விடத்திற்கு வருகை தந்த பிரதேச செயலாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் பொறுப்பான உத்தியோகத்தர்களுடன் உரையாடி இருப்பை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதற்கிணங்க 2200 லீற்றர் வரை இருப்பு உள்ளதாகவும் அதில் 600 லீற்றர் பாவனைக்கு எடுக்க முடியாது எனவும் 1600 லீற்றர் அத்தியாவசிய தேவைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆயினும் பிரதேச செயலாளர் மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி இருக்கின்ற கையிருப்பில் ஒருவருக்கு 1000 ரூபா வீதம் 1000 லீற்றரை வழங்கலாம் எனவும் ஆலோசனை வழங்கியதுடன் முடிவை எரிபொருள் நிரப்பு நிலைய நிருவாகமே மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதன் பிரகாரம் நேற்று மாலை முதல் மீண்டும் எரிபொருள் வழங்கப்பட்டதுடன் நிலைமை வழமைக்கு திரும்பியது.
இதேநேரம் கடந்த காலங்களில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகள் திருப்திகரமாக அமைந்திருந்ததுடன் பலரது பாராட்டையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment