Alt News இணை நிறுவனர் முகமது ஜுபைர்,கைது




 


Alt News இணை நிறுவனர் முகமது ஜுபைர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு ஒன்றில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருமாறு அவரை டெல்லி காவல்துறையின் தனிப்பிரிவினர் அழைத்திருந்தனர்.

ஆனால் வேறொரு வழக்கில் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் கூறினர் என்று ஆல்ட் நியூஸின் மற்றொரு இணை நிறுவனர் பிரதீக் சின்ஹா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், "2020இல் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு ஒன்றின் விசாரணைக்காக வரும்படி டெல்லி காவல்துறையின் தனிப்பிரிவினர் அழைத்தனர். அந்த வழக்கில் தாம் கைது செய்யப்படாமல் இருக்க நீதிமன்றத்தில் இருந்து உத்தரவைப் பெற்றிருந்தார் முகமது ஜுபைர். ஆனால், விசாரணைக்கு ஆஜரான அவரை மாலை 6.45 மணியளவில் வேறொரு வழக்கில் அதன் முதல் தகவல் அறிக்கை நகலைக் கூட வழங்காமல் போலீஸார் கொண்டு சென்றனர். பல முறை கேட்டும் போலீஸார் முதல் தகவல் அறிக்கையைக் காண்பிக்கவில்லை. அவரைக் கொண்டு சென்ற வேனில் இருந்தவர்கள் தங்களுடைய பெயர் பேட்ஜை சீருடையில் அணிந்திருக்கவில்லை," என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், ஜுபைர் அகமது மீது இந்திய தண்டனைச் சட்டம் 153A (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) மற்றும் 295A (எந்தவொரு வகுப்பினரின் மத உணர்வுகளையும் சீற்றம் செய்யும் நோக்கில் வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயலில் ஈடுபடுதல் மற்றும் மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதித்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆனால், அந்த வழக்கில் புகார்தாரர் யார், அதன் விவரம் என்ன என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை.


இன்று என்ன நடந்தது?

2020ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார் முகமது ஜுபைர். அந்த வழக்கில், சமூக ஊடகத்தில் தன்னை தவறாக பேசிய ஒருவரை ஜுபைர் எதிர்கொண்ட ட்வீட் தொடர்பாக 2020இல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உண்மைச் சரிபார்ப்பு குறித்த தனது ட்வீட்டிற்குப் பதிலளித்த ஒரு பயனர் ஜுபைரை தகாத வார்த்தைகளால் விமர்சித்து இடுகையை பதிவிட்டிருந்தார்.