ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் இலங்கை பொலிஸாரால் கைது




 


கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இன்று (20) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒரு பிக்கு, நான்கு பெண்கள் மற்றும் 16 ஆண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

நேற்று (19) இரவு லோட்டஸ் வீதியில் இருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் இரண்டு வாயில்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி, பின்னர் நிதியமைச்சு மற்றும் திறைசேரிக்கு செல்லும் இரண்டு வாயில்களையும் தடுத்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் குறித்த அலுவலகங்களின் நுழைவாயில்களில் கூடாரங்களை அமைத்தனர், இதனால் அந்தந்த அலுவலகங்களில் அத்தியாவசிய சேவைகளுக்காக செல்லும் பொது ஊழியர்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் பொது மக்களையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்கியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்பில் கலந்துகொள்வதற்கு நிதியமைச்சின் செயலாளர் அரை மணித்தியாலம் தாமதமாகவே சென்றதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

எனவே, பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்ய தீர்மானித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று (20) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.