நடிகர் அஜித் குமார்
'அமராவதி'யில் ஆரம்பித்து 'காதல் மன்னன்', 'ஆசை', 'அமர்க்களம்' என தொடர்ந்து 'வலிமை' வரை தனது 60 படங்களை முடித்து இருக்கிறார் நடிகர் அஜித். சினிமாவில் கதாநாயகனாக அவருக்கு 30வது வருடம் இது. மே 1ஆம் தேதி நடிகர் அஜித்தின் 51வது பிறந்தநாள். அவர் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
* சினிமாவில் 60 படங்களை கடந்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் அஜித் நடிக்க வருவதற்கு முன்பு தன்னுடைய ஆரம்ப காலத்தில் பைக் மெக்கானிக்காக வேலை பார்த்தார்.
•நடிகர் அஜித் சமீபத்தில் தன்னை 'தல' என்ற அடைமொழியோடு இனி அழைக்க வேண்டாம் என அறிக்கை வெளியிட்டிருந்தார். உண்மையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு 'தீனா' படத்தில் நடிகரும் ஸ்டன்ட் கலைஞருமான 'மகாநதி' சங்கர் தான் அஜித்தை 'தல' என்று அழைப்பார். அதற்கு பிறகே அவருக்கு 'அந்த அடைமொழி' பிற படங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் பயன்படுத்தப்பட்டது.
•'படிப்பு நம் அனைவரது வாழ்க்கையிலும் மிக முக்கியம். நான் பத்தாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறேன். பின்னாளில் படிக்காமல் போய் விட்டேன் என பல முறை வருத்தப்பட்டது உண்டு. தன்மானம் மிக முக்கியம். நீங்கள் விரும்பிய வேலையை முழு மூச்சாக செய்யுங்கள்' என்பது தான் தன் ரசிகர்களுக்கு அஜித் கொடுக்கும் 'ஆல்டைம் அட்வைஸ்'.
•'வாழு, வாழ விடு' என்பதை எப்போதும் கடைப்பிடிப்பார் அஜித். கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர். பட வேலைகள், அது குறித்த அறிவிப்பு ஆகியவற்றை நல்ல நேரம் பார்த்தே தொடங்குவார். பெரும்பாலும் அவரது படங்கள் குறித்த எந்த விதமான அறிவிப்பும் வியாழக்கிழமை வெளிவருவது வழக்கம்.
•காதலில் எதையும் பேசும் சுதந்திரமும், நேர்மையும் மிக முக்கியமானது என்பார் அஜித்.
•தமிழில் 'அமராவதி' படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் அஜித்திற்கு பரவலான அறிமுகம் கொடுத்தது 'ஆசை' திரைப்படம் தான். அந்த திரைப்படத்தின் இயக்குநர் வசந்த்திடம் அஜித்தை தேர்ந்தெடுத்தது குறித்து பேசிய போது, 'அமராவதி' படத்திற்கு முதலில் நடிகர் அஜித் என் தேர்வு கிடையாது. அந்த கதைக்கு அரவிந்த்சாமியை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்திருந்தேன். ஆனால், அந்த சமயத்தில் அவரது தேதிகள் கிடைக்காததால் பெண்களுக்கு பிடித்தமான அழகான ஒரு கதாநாயகனை தேடிக் கொண்டிருந்தோம். அப்போது தான் ஒரு விளம்பரத்தில் அஜித்தை பார்த்தேன். பார்த்ததும் அவரைப் பிடித்து விட்டது. நேரில் கதை சொன்னதும் அவருக்கும் பிடித்து விட்டது. அப்போதெல்லாம் அதிகம் பைக்கில் தான் வந்து போவார். படம் வெளியாகி இன்று வரைக்கும் அவருடைய சினிமா பயணத்தில் முக்கிய படமாக 'ஆசை' இருப்பதில் மகிழ்ச்சி" என்கிறார்.
•'ஆசை' நாயகனாக இருந்தவரை 'காதல் மன்னன்' ஆக அறிமுகப்படுத்தியது இயக்குநர் சரண் தான். 'காதல் மன்னன்', 'அமர்க்களம்', 'அட்டகாசம்', 'அசல்' என நடிகர் அஜித்தின் ஆரம்ப காலம் தொட்டே அவருடன் பயணித்து வருபவர். 'காதல் மன்னன்' படம் வெளியான பிறகு அஜித்திற்கு முதுகுத்தண்டில் ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. அதற்காக அவரை மருத்துவமனையில் சந்தித்தேன். அப்போது என்னிடம், 'அடுத்து ஒரு ஆக்ஷன் கதை சொன்னீர்களே, அதை தயார் செய்யுங்கள். விரைவில் நான் படப்பிடிப்புக்கு வருகிறேன் என்றார். அந்தக் கதை தான் 'அமர்க்களம்'. அஜித் எப்போதும் தன்னிடம் நெருக்கமாக பழகுபவர்களிடம் உண்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் இருப்பார். அவரிடம் எனக்கு பிடித்த விஷயங்களில் அவரது தன்னம்பிக்கையும் ஒன்று என்கிறார் சரண்.
•நடிகர் அஜித்திற்கு கார், பைக் ரேசிங், விமானம், புகைப்படக்கலை இவற்றில் எல்லாம் ஆர்வம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவருக்கு மினியேச்சர் ஹெல்மெட், நாணயங்கள் மற்றும் விதவிதமான தபால் தலைகள் சேகரிப்பது, புத்தகங்கள் படிப்பதில் அவருக்கு ஆர்வம் அதிகம்.
•'ஆசை', 'காதல் மன்னன்' என சினிமாவின் ஆரம்ப காலத்தில் காதல் நாயகனாக வலம் வந்த அஜித்தை கோபக்கார இளைஞன் கதாபாத்திரத்தில் பொருந்தி போக செய்தது 'உல்லாசம்' திரைப்படம் தான். இயக்குநர் ஜேடி இந்த படம் குறித்து பகிர்ந்த போது, "முதலில் இந்த கதை கேட்ட அனைவரும் அஜித்திற்கு இந்த கதாபாத்திரம் பொருந்தாது என்று தான் சொன்னார்கள். ஆனால், அவர் இதில் நடிக்க முழு ஈடுபாடு காட்டினார். இந்த படத்தினால் தான் பின்னாளில் 'அமர்க்களம்', 'ரெட்' போன்ற படங்களில் அவரை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடிந்தது.
இப்போதெல்லாம் படப்பிடிப்பு தளத்தில் அஜித் பிரியாணி செய்து தருவார் என்ற செய்திகளை எல்லாம் பார்க்க முடிகிறது. ஆனால், அந்த சமயத்தில் எங்களுக்கு மீன் குழம்பு வைத்து கொடுத்திருக்கிறார். 'உல்லாசம்' படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக வெளிநாடு சென்றிருந்த போது முதன் முறையாக அவரது அம்மா அப்பாவையும் அழைத்து வந்திருந்தார் அஜித். படப்பிடிப்பு தளத்தில் எல்லாரிடமும் பணிவாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்வார்"
•'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' படங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் ஹெச். வினோத்துடன் தனது 61வது படத்தில் இணைந்திருக்கிறார் அஜித். அஜித்தின் கதாபாத்திரம் எதிர்மறையாக இதில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என முன்பு பிபிசி தமிழுடனான பேட்டியில் பகிர்ந்திருந்தார் வினோத். மேலும், அவரிடம் பேசிய போது, 'அஜித் எப்போதும இயக்குநர்களை தன்னை ஒப்படைத்தது விடுவார். கதையில் எந்த குறுக்கீடும் செய்ய மாட்டார். அந்த நம்பிக்கை தான் அவரை வைத்து திரைக்கதையை என் விருப்பபடி அவருக்கு ஏற்றாற் போல செய்ய முடிந்தது" என புன்னகைக்கிறார் வினோத். அஜித்துடனான இவரது அடுத்த படத்திற்கு படப்பிடிப்பு தீவிரமாக ஹைதராபாதில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment