""அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்கும்"





 (க.கிஷாந்தன்)

" மக்கள் பக்கம் நின்றே,  அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்கும் முடிவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எடுத்துள்ளது." - என்று இ.தொ.காவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.  

அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இ.தொ.காவின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகவியலாளர் தொலைப்பேசி வாயிலாக கேட்ட போது, இந்த கருத்தை வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

" நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும் என அறிவிப்பு விடுத்தவர்களுக்கு கூட, அது  வெற்றிபெறுமா என்ற சந்தேகம் இருந்தது.  அதுமட்டுமல்ல உள்ளடக்கங்கள் பற்றி எம்முடன் பேச்சு நடத்தப்படவில்லை. அதனால் தான் நடுநிலை என்ற அறிவிப்பு விடுக்கப்பட்டது. 

 

தற்போது பிரேரணை பற்றி எமக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அது  வெற்றியளிக்ககூடிய சாத்தியமும்  காணப்படுகின்றது. பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்பதுதான் மக்களின் கருத்து. மக்களின் தீர்ப்பே, எமது அரசியல் நடவடிக்கை. அந்த கொள்கையின் அடிப்படையில் செயற்படும் கட்சியே இ.தொ.கா.

 

அன்று முதல் இன்று வரை நாம் தடம்மாறி பயணித்தது கிடையாது.  அந்தவகையில் மக்கள் முடிவை ஏற்று, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களிப்போம்." - என்றார்.