பாறுக் ஷிஹான்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு உரிய தீர்வுகளை விரைவாக பெற்றுத்தருமாறு அரசை வலியுறுத்தி நாடு பூராகவும் பல அரச தனியார் துறை தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொண்டுள்ளன.
இதற்கமைய வியாழக்கிழமை(28) அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில், நிந்தவூர், அம்பாறை நகர் பகுதி, நாவிதன்வெளி, அக்கரைப்பற்று, பகுதிகளில் பணிப்பகிஷ்கரிப்புகள் பல தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக அரச நிறுவனங்களான பிரதேச செயலகங்கள் திணைக்களங்களில் ஊழியர்களின் வரவு வீதம் வழமையை விட குறைந்த அளவில் காணப்படுகின்றது.அத்துடன் இங்குள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்களின் வருகை மந்த கதியில் உள்ளதுடன் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
சில இடங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் வங்கிகளில் இரு மணித்தியாலங்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்ட்டு இப்போராட்டத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளனர்.
இது தவிர அம்பாறை மாவட்டத்தில் பொதுமக்களின் நடமாட்டமானது வழமையை விட குறைந்த அளவில் உள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பு கடமையில் ஆங்காங்கே ஈடுபட்டுள்ளனர்.மேலும் இங்குள்ள வைத்தியசாலைகளில் உள்ள தாதிகள் வைத்தியர்கள் ஊழியர்கள் .ணைந்து அரசின் செயற்பாட்டை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இதே வேளை பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவின் தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்களும் அரசாங்கத்தின் செயற்பாட்டை கண்டித்து ஒரு நாள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பினை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்டத்தில் பெரும்பாலான தனியார் வர்த்தக நிலையங்கள் வழமை போன்று திறக்கப்பட்டு வியாபாரங்கள் இடம்பெற்றது.எதிர்வரும் நோன்பு பெருநாளினை முன்னிட்டு மக்கள் ஆர்வத்துடன் ஆடை பொருட் கொள்வனவிலும் ஈடுபட்டிருந்தனர்.
Post a Comment
Post a Comment