நுவரெலியா நகரிலும் பாரிய போராட்டம்




 


(க.கிஷாந்தன்)

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் இன்று (28) வியாழக்கிழமை நடைப்பெற்று வரும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு வலுசேர்க்கும் முகமாக நுவரெலியாவிலும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு ஆதரவு தெரிவித்து நுவரெலியா, நானுஓயா, தலவாக்கலை நகரங்களில் வர்த்தக நிலையங்களை மூடி வர்த்தகர்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலைய கடைகள் மூடப்பட்டு மரக்கறிகள் கொள்வனவு செய்யப்படவில்லை.

இதேவேளை இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் நுவரெலியா நகர வர்த்தகர்கள், ஊழியர்கள், விசேட பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள், ஊழியர்கள், பெருந்தோட்ட தொழிலாளர்கள், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை உதவியாளர்கள், தபால் ஊழியர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் உட்பட அரச திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்துக்கொண்டனர்.

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்தும், ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ ,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் உடனடியாக அரசாங்கத்தைவிட்டு விலக வேண்டும். எனவும் போராட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும், போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கண்டி வீதி, உடபுஸ்ஸாவ வீதி, நானுஓயா வீதி வழியாக பேரணியாக சென்ற மக்கள் நுவரெலியா பிரதான தபாலகத்திற்கு முன்பாக ஒன்று சேர்ந்து இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.