மோதி-போரிஸ் சந்திப்பின் முக்கிய ஹைலைட்ஸ்




 


பிரிட்டனுடன் பிரெக்ஸிட் அமலாக்கத்துக்குப் பிந்தைய வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியா மிகப்பெரிய உந்துதலை வெளிப்படுத்தியுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து போரிஸ் ஜான்சன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது வரும் அக்டோபர் இறுதியில் அதாவது தீபாவளிக்குள் இரு நாடுகளும் சேர்ந்து வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளும் பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதியளித்தார்.

அடுத்த வாரம் இரு தரப்பும் புதிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் முன்னதாக, பிரிட்டன்-இந்தியா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை, "ஒரு முழுமையான புதிய நிலைக்கு" செல்லும் என்று போரிஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக, போரிஸ் ஜான்சன் தனது இலக்கு என்பதே இந்தியாவுடன் தற்போதைக்கு முழு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல், கொள்கையளவில் ஒரு உடன்படிக்கையை எட்டுவதே என்று சமிக்ஞை செய்திருந்தார்.

இந்த ஆண்டு இந்தியாவுடனான எந்தவொரு ஒப்பந்தமும் முழு உடன்பாட்டுக்கு முன்னோடியாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பேச்சுவார்த்தைகள் இன்னும் ஒப்பீட்டளவில் ஆரம்ப கட்டத்தில் உள்ளன என்று அவர்கள் கூறுகின்றனர்.

அத்தகைய முழு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு முன்பாக இரு தரப்பிலிருந்தும் "கடினமான கேள்விகள்" இருக்கும் என்று ஜான்சன் எச்சரித்தார்.

வர்த்தக உறவை வலுப்படுத்த விருப்பம்

ஜான்சனின் இரண்டு நாள் பயணத்தின் இறுதி நாளில் இந்திய தலைநகரில் இரு தலைவர்களுக்கும் இடையே நடந்த இன்றைய சந்திப்பு ஓராண்டுக்கு முன்பே நடந்திருக்க வேண்டியது. ஆனால், அது கொரோனா பெருந்தொற்று பரவல் மற்றும் இரு நாடுகளிலும் அதை பரஸ்பரம் கட்டுப்படுத்தும் முயற்சிகளால் தள்ளிபோய் வந்தது.

இன்றைய சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை போரிஸ் ஜான்சனும் நரேந்திர மோதியும் கூட்டாக சந்தித்தனர். அப்போது போரிஸ், "ஆசியாவில் நம்பமுடியாத உயரும் சக்தி" ஆக இந்தியா விளங்குகிறது என்றும் இரு தரப்பு வர்த்தகத்தை ஆழமாக்குவதற்கு தமது நாடு முன்னுரிமை தரும் என்றும் கூறினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்தியாவுடனான முழு ஒப்பந்தத்தின் முன்னோட்டமாக இந்தியர்களுக்கு தமது நாட்டில் பின்பற்றப்படும் குடியேற்ற விதிகளில் சில தளர்வுகள் காட்டப்படலாம் என குறிப்பால் உணர்த்தினார் போரிஸ் ஜான்சன்.

இதுபற்றிப் பேசும்போது, இந்திய திறன்கள் ஐடி போன்ற துறைகளுக்கு உதவக்கூடும் என்றும் "திறமையும் செயலாற்றலும் உள்ளவர்களை பிரிட்டனுக்குள் அனுமதிப்பதில் நான் பிடிவாதமாக இருக்கப் போவதில்லை," என்றும் போரிஸ் கூறினார்.

"இத்தகைய வருகையை கட்டுப்படுத்த வேண்டும் என்று தான் எப்போதும் நான் கூறி வருகிறேன்," என்றும் போரிஸ் தெரிவித்தார்.

2px presentational grey line

இங்கிலாந்து இந்தியாவிற்கு எவ்வளவு விற்கிறது?

இந்தியாவிற்கு விற்பதை விட பிரிட்டன் இந்தியாவிடமிருந்து அதிகம் வாங்குகிறது. ஏனென்றால், பிரிட்டன் ஏற்றுமதிகள் மீதான வரிகள் போன்ற உயர் வர்த்தகத் தடைகளை இந்தியா விதிக்க முனைகிறது, இது 'சுங்க வரி' என்று அழைக்கப்படுகிறது.

உதாரணமாக, வெளிநாட்டு கார்களுக்கு 100% வரையிலான வரிக் கட்டணங்களை இந்தியா விதிக்கிறது.

இதன் விளைவாக, பிரிட்டன் தற்போது பெல்ஜியத்தை விட அதன் பரந்த மக்கள்தொகை கொண்ட இந்தியாவிற்கு குறைவாகவே விற்பனை செய்கிறது. மேலும் இது மோசமாகி வருகிறது: கடந்த ஆண்டு, பிரிட்டன் இந்தியாவிற்கு 4.7 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள பொருட்களை விற்று 8.4 பில்லியன் பவுண்டுகளை வாங்கியது - இது பிரிட்டனுக்கும் இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கும் இடையே இதுவரை இல்லாத மிகப்பெரிய இடைவெளி ஆகும்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முதல் ஐந்து பொருட்களாக இருப்பது: ஆடை, மருந்து, துணிகள், தொழில்துறை இயந்திரங்கள் மற்றும் மின்சார பொருட்கள், உலோகங்கள் மற்றும் மின் உற்பத்தியாளர்கள்.

2px presentational grey line

மோதியை சந்திக்கும் முன்னதாக, இந்தியாவிற்கு ராணுவ வன்பொருள் ஏற்றுமதி செய்வதற்கான உரிம விதிகளை நெறிப்படுத்த பிரிட்டன் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் அறிவித்தது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

ரஷ்யாவிடமிருந்து வாங்கப்படும் ஆயுதங்களின் அளவைக் குறைக்கும் முயற்சியில், போர் விமானங்களை உருவாக்க இந்தியாவுக்கு பிரிட்டன் ஆதரவளிக்கும் என்று பிரிட்டன் பிரதமர் இல்லம் கூறியது.

பிரிட்டனின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களின் ஒரு பகுதியான "பசுமை" ஹைட்ரஜன் சக்தியின் விலையைக் குறைப்பதற்கான ஆராய்ச்சியை அதிகரிக்கவும் ஈடுபாடு காட்டப்படும் என பிரிட்டன் கூறியது.

போரிஸ் ஜான்சன் நரேந்திர மோதி

பட மூலாதாரம்,PA MEDIA

படக்குறிப்பு,

பிரதமர் போரிஸ் ஜான்சன் வியாழக்கிழமை குஜராத் பயோடெக்னாலஜி பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்

இந்த நிலையில், ஹைதராபாத் இல்லத்தில் போரிஸ் ஜான்சன், நரேந்திர மோதியுடனான சந்திப்பின் போது ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுகள் குறித்த பிரச்னையை எழுப்பியதாக செய்தியாளர்களிடம் கூறினார்.

யுக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு படையெடுப்பு விவகாரத்தில், தனது நடுநிலை போக்கை இந்தியா கைவிட வேண்டும் என மற்ற மேற்கத்திய நாடுகளுடன் சேர்ந்து, பிரிட்டன் வற்புறுத்தி வருவதாகவும் தனது மிகப்பெரிய ஆயுத விநியோக நாடான ரஷ்யாவை கண்டிப்பதில் மற்ற நாடுகளுடன் இந்தியா ஒன்றுசேர தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் போரிஸ் தெரிவித்தார்.

இந்த மாத தொடக்கத்தில் யுக்ரேனிய நகரான புச்சாவில் நடந்த கொலைகளை இந்தியா கண்டித்தது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு இந்தியா வெளியிட்ட கடுமையான அறிக்கையாக அது பார்க்கப்பட்டது. ஆனால் அப்போதும் கூட வன்முறைக்கு ரஷ்யாவை குறிப்பிட்டு இந்தியா குற்றம்சாட்டவில்லை. பிப்ரவரியில் ரஷ்ய படையெடுப்பு தொடங்கியது முதல் இப்போதுவரை ரஷ்யாவை இந்தியா நேரடியாக விமர்சிக்கவில்லை.

போரிஸ் மோதி

பட மூலாதாரம்,PA MEDIA

படக்குறிப்பு,

குஜராத்காந்தி நகரில் உள்ள சுவாமி நாராயணன் அக்ஷார்தாம் ஆலயத்துக்கு சென்ற போரிஸ் ஜான்சன்

இது குறித்து போரிஸ் ஜான்சனிடம் கேட்டபோது, புச்சா படுகொலைகளைக் கண்டிப்பதில் இந்தியா "மிகவும் வலுவாக" இருப்பதாகவும், ரஷ்யாவுடனான இந்தியாவின் நீண்டகால உறவை "எல்லோரும் புரிந்துகொண்டு மதிக்கிறார்கள்" என்றும் பதிலளித்தார்.

நரேந்திர மோதி "விளாதிமிர் புதினிடம் பலமுறை பேசியபோது இந்த பூமியில் அவர் என்ன செய்யநினைக்கிறார்" என்று பேசியதாகவும் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டார். இந்த கருத்துக்களை வெளியிட்டபோது அவருக்கு அருகே நரேந்திர மோதியும் இருந்தார்.

"யுக்ரேன் விவகாரத்தில் இந்தியர்கள் விரும்புவது அமைதி. மேலும் அங்கிருந்து ரஷ்ய படையினர் வெளியேற வேண்டும் என நான் நினைக்கிறேன்," என்றார் போரிஸ் ஜான்சன்.

யுக்ரேன் தலைநகர் கீயவில் அடுத்த வாரம் பிரிட்டன் தூதரகத்தை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோதியை ஹிந்தி மொழியில் "காஸ் தோஸ்த்" (சிறந்த நண்பர்) என்று அழைத்த பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்த ஆண்டு தீபாவளிக்குள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பாதையை நோக்கி நாங்கள் பயணம் செய்கிறோம்" என்று கூறினார்.

மற்ற நாடுகளில் பயங்கரவாதத்தை பரப்புவதற்கு ஆப்கானிஸ்தான் பிரதேசம் பயன்படுத்தப்படக் கூடாது என்று வலியுறுத்திய அவர், "அமைதியான, நிலையான மற்றும் பாதுகாப்பான ஆப்கானிஸ்தானுக்கு நாங்கள் எங்கள் ஆதரவை மீண்டும் வழங்குவதை உறுதிப்படுத்திக் கொண்டோம் என்று போரிஸ் தெரிவித்தார்.

மோதி என்ன சொன்னார்?

மோதி போரிஸ்

பட மூலாதாரம்,REUTERS

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவிற்கு வருவது முதல் முறையாக இருக்கலாம், ஆனால் அவருக்கு இந்தியாவை நன்றாகத் தெரியும். இந்தியா-பிரிட்டன் உறவுகளை மேம்படுத்துவதில் அவர் பெரும் பங்காற்றியுள்ளார் என்று நரேந்திர மோதி குறிப்பிட்டார்.

எங்களது கேந்திர மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மை குறித்து விரிவாக விவாதித்தோம். இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் பேசினோம். இது ஆண்டு இறுதிக்குள் தயாராகி விடும். இது நாம் சமீபத்தில் கையெழுத்திட்ட இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் போன்றே இருக்கும் என்று மோதி கூறினார்.

இந்தியாவில் உற்பத்தி செய்வதில், குறிப்பாக பாதுகாப்புத் துறையில், 'ஆத்மநிர்பார் பாரத்' வெற்றி பெறுவதில் பிரிட்டனின் ஆர்வத்தை வரவேற்கிறோம். இந்தியாவின் தேசிய ஹைட்ரஜன் இயக்கத்தில் சேர பிரிட்டனை அழைக்கிறோம் என்று மோதி தெரிவித்தார்.

தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப்களுக்கு நிதியளிப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு இந்தியாவும் பிரிட்டனும் இணைந்து $100 மில்லியன் முன்முயற்சியை உருவாக்கும்.

ரஷ்யா-யுக்ரேன் போரில் நாடுகளுக்கு இடையேயான உரையாடலில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். மேலும் இரு நாடுகளின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு பராமரிக்கப்பட வேண்டும் என்று எப்போதும் நிலைநிறுத்துகிறோம். ஆப்கானிஸ்தானில் ஒரு ஜனநாயக மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்திற்கான எங்கள் வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்தினோம்" என்றார் நரேந்திர மோதி.

ஹைதராபாத் இல்லத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் இந்திய பிரதமர் நரேந்திர மோதியும்

பட மூலாதாரம்,@BORISJOHNSON

ஹைதராபாத் இல்லத்தில் நடந்த சந்திப்புக்கு முன்னதாக, பிரிட்டன் மற்றும் இந்தியா இடையே புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது. மேலும் அரசு சார்ந்த மற்றும் அரசு சார்பற்ற அலுவல்கள் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அதன் விவரம்:

G2G புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்வெளிவிவகார அமைச்சகம், இந்திய அரசு மற்றும் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம், பிரிட்டன் இடையே உலகளாவிய கண்டுபிடிப்பு கூட்டாண்மையை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்; அணுசக்தித் துறை, இந்திய அரசு மற்றும் வணிகம், எரிசக்தி மற்றும் தொழில்துறை உத்திகள் வகுப்புத்துறைகள் மற்றும் பிரிட்டன் இடையே அணுசக்தி கூட்டாண்மைக்கான உலகளாவிய மையத்தில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

அரசு சாரா புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்ஐசிசிஆர் மற்றும் பர்மிங்காம் நகர பல்கலைக்கழகம் இடையே பர்மிங்காம் நகர பல்கலைக்கழகத்தில் குறுகிய கால இருக்கையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்;இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனம் (NIWE) மற்றும் கடல்கடந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கவண் (OREC) ஆகியவற்றுக்கு இடையே கடலோர காற்று மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்கான கூட்டுப் பிரகடனம்;

வெளிநாடு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் - டெல்லியில் உள்ள பிரிட்டன் தூதரகம் மற்றும் அதானி குழுமத்திற்கு இடையே செயற்கை நுண்ணறிவு குறித்த செவனிங்/அதானி ஸ்காலர்ஷிப்களை உருவாக்குவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்;

நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்எஸ்ஐஎல்) மற்றும் ஒன்வெப் இடையே செயற்கைக்கோள் ஏவுதல் திட்டத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்றவை இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இரு தலைவர்களும் ஒப்புக் கொண்ட எட்டு அம்ச சைபர் பாதுகாப்பு கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது. அதன்படி இந்தியாவும் பிரிட்டனும் திறந்தவெளி, பாதுகாப்பான, நிலையான, அணுகக்கூடிய மற்றும் அமைதியான இணையவெளிக்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த ஈடுபாடு காட்டும் என்று இரு நாடுகளும் அறிவித்துள்ளன.