பாறுக் ஷிஹான்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீனை கொச்சைப்படுத்தும் செயற்பாட்டினை பாராளுமன்ற உறுப்பினரும் தற்போது இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளவருமான முசாரப் முதுநபீன் கைவிட வேண்டும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபையின் 49 ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வில் பின்னர் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை செவ்வாய்க்கிழமை(26) இரவு அன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் கல்முனை பகுதியில் நடாத்திய பின்னர் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர்கள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் முஸாரப் முதுநபீன் தனக்கு சாதகமாக குறித்த சம்பவத்தை பயன்படுத்தி எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினை அழிக்க முயன்றதாகவும் ஏனைய கடும் போக்கு அரசியல் கட்சிகளுக்கு அவர் சோரம் போய் டீல் அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டனர்.
சி.எம்.முபீத்( அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்- கல்முனை மாநகர சபை உறுப்பினர்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் பயங்கரவாத தடுப் புச்சட்டத்தின் கீழ் மிலேச்சத்தனமான முறையில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தனது வங்குரோத்து தனமான திட்டமிட்ட அரசியல் சதி ஒன்றினை ஆரம்பித்து எமது கட்சியை அழிக்க முற்பட்டுள்ளார்.இவரை எதிர்வரும் காலங்களில் மக்கள் கட்டி வைத்து அடிப்பதற்கும் தயங்க மாட்டார்கள் என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் மற்றும் அவரது சகோதரரின் கைதுகள் எமக்கு கவலையும் அளித்த போதிலும் குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு மகிழ்ச்சியான காலகட்டம் என்றே கூற முடியும். இன்றைய கோத்தாபய அரசில் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வுரிமை கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இராஜாங்க அமைச்சினை இவர் பொறுப்பெடுத்துள்ளதுடன் எமது கட்சிக்கும் தலைவருக்கும் துரோகம் இழைத்துள்ளார்.அதுமாத்திரமன்றி எமது தலைவரை சத்தியம் செய்ய அழைக்கும் இவரது செயற்பாடானது சிறுபிள்ளைத்தனமானது.ஒரு உண்மையை மறைப்பதற்காக ஆயிரம் பொய்களை இந்த பாராளுமன்ற உறுப்பினர் கூறிவருகின்றார்.எனவே மிக விரைவில் தனது பிழைகளை உணரும் காலம் அவருக்கு வரும் என்பதை இன்னும் சில நாட்களில் புரிந்து கொள்வார் என தெரிவிக்க விரும்புகின்றேன்.
தற்போது எமது நாட்டில் சட்டமும் ஜனநாயகமும் குழி தோண்டிப் புதைக்கப்பட்டள்ளது என்பதை நாம் அறிவோம்.அத்துடன் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் அரசின் செல்வாக்கும் . நம்பிக்கையும் சரிந்து கொண்டிருக்கும் நிலைமையில் அரசின் சர்வதிகார ஆட்சியும் தொடர்கிறது . இதில் எமது பாராளுமன்ற உறுப்பினர் முஸாரப் முதுநபீன் அமைச்சினை பெற்றிருப்பதானது எமது சமூகத்திற்கு எதுவித பலனையும் பெற்றுக்கொடுக்கப் போவதில்லை என்றார்
கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்)
அரசியல் சலசலப்புக்கள் உள்ள இந்த காலகட்டத்தில் தலைவர் றிசாத் பதியுதீனை சீண்டிப்பார்ப்பதற்கு தற்போதைய இராஜாங்க அமைச்சர் முஸாரப் முதுநபீன் முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.தற்போதைய அரசியல் சலசலப்புக்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனையே அரசாங்கம் மையப்படுத்தி பழிவாங்குவதை இந்த நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.இருந்த போதிலும் அரசியல் முகவரியை எமது கட்சியின் ஊடாக பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் முஸாரப் முதுநபீன் உள்ளிட் ஏனைய பாராளுமனற் உறுப்பினர்கள் எமது தேசிய தலைவரை சத்தியம் செய்ய அழைப்பதை ஏற்க முடியாது.இவர்களது சிறுபிள்ளைத்தனமான இச்செயற்பாட்டினை கண்டிப்பதுடன் எதிர்வரும் காலங்களில் மக்கள் இவர்களுக்கு சரியான பாடங்களை புகட்ட வேண்டும் என கேட்டக்கொள்கின்றேன் என்றார்.
பஸீரா றியாஸ்(அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்- கல்முனை மாநகர சபை உறுப்பினர்)
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனை தற்போதைய ராஜாங்க அமைச்சர் முசாரப் முதுநபீன் சீண்டும் செயற்பாடு கண்டனத்திற்குரியது .அரசாங்கம் அண்மைக்காலமாக முஸ்லீம்கள் மீது அடக்குமுறைகளை மேற்கொண்டு வந்துள்ளதுடன் தற்போது பெருன்பாண்மை சமூகத்தின் எதிர்ப்பினையும் குறுகிய காலத்தில் சம்பாதித்துள்ளது.இதனிடையே எமது கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் முஸாரப் முதுநபீன் அமைச்சினை பொறுப்பேற்று எமது கட்சிக்கு துரோகம் இழைத்துள்ளார்.இவரது துரோகத்தனத்தை கண்டிப்பதுடன் இவரின் அரசியல் எதிர்காலத்தில் மக்களினால் தீர்மானிக்கப்படும் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன் என்றார்.
Post a Comment
Post a Comment