தொழிற்சங்கங்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அம்பாரை மாவட்டத்திலும்





வி.சுகிர்தகுமார்


  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகளில் இருந்து விடுபட உடனடி தீர்வு காணுமாறு வலியுறுத்தி அரச சேவையாளர்கள் இன்று நாடு தழுவிய ரீதியில் ஒருநாள் சுகயீன லீவு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இந்த சுகயீன லீவு போராட்டத்திற்கு கிழக்கு மாகாணத்தின் இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கம் முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றது.

இதேநேரம் தேசிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்படும் தொழிற்சங்கங்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அம்பாரை மாவட்டத்திலும் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் பணிப்பகிஷ்கரிப்பும் இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைவாக அக்கரைப்பற்று பிரதேசத்திலும் அரச வங்கிகள் அரச திணைக்களங்கள் தபால் நிலையங்கள் பாடசாலைகள் என்பன மூடப்பட்டுள்ளன.

பாடசாலைகளுக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் சமூகமளிக்காத நிலையில் கல்வி நடவடிக்கைகள் யாவும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

அத்தோடு அரச திணைக்களங்கள் மற்றும் வங்கிகள் யாவும் மூடப்பட்டுள்ளமையால் மக்களின் அன்றாட சேவைகளும் தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில் தபால் நிலையங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் தபால் சேவைகள் யாவும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஆயினும் அக்கரைப்பற்று மத்திய பஸ் போக்குவரத்து நிலையத்தில் இருந்து போக்குவரத்து சேவை இடம்பெறுவதுடன் போக்குவரத்து நடவடிக்கையில் தனியார் மற்றும் அரச பேருந்துகள் ஈடுபட்டுவருவதையும் அவதானிக்க முடிந்தது.