அஞ்சலி!
வடக்கின் கணித இமயம் நல்லையா மாஸ்டர்!
கரவெட்டி "சயன்ஸ் சென்ரர்" நினைவுகளூடாக...
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•
வடமராட்சியில் மட்டுமன்றி வடக்குக் கிழக்கில் பல தமிழ் முஸ்லிம் பொறியியலாளர்கள், பேராசிரியர்கள்,விரிவுரையாளர்கள், கட்டிடக்கலை நிபுணர்கள், தொழினுட்ப வியலாளர்கள், படவரைஞர்கள், விரிவுரையாளர்கள், கணித ஆசான்கள் என கணிதச் சந்ததிகளை உருவாக்கிய முக்கிய கர்த்தாக்களில் ஒருவராய்த் திகழ்ந்த ஆசிரியர் நல்லையா மாஸ்டர் பிரிந்த செய்தி துயரம் மிக்கதொன்றாகும்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த ஒலிபரப்பாளர் வி ஏ கபூர் அவர்களின் மருமகனும் கிழக்கிலங்கையின் மூத்த பொறியியலாளருமான ஏ எம் ஜூனைட் நல்லையா மாஸ்டரின் மாணவர்.
அக்காலத்தில் நெல்லியடியில் தங்கியிருந்து படித்தவர்களில் ஒருவர்.
அவர் நல்லையா மாஸ்டர் பற்றி ஒருமுறை சொல்லும்போது பிரயோக கணிதத்தை விளங்க வைக்க அவரது அந்தக் குரலுந்தான் காரணம் என்றார்.
ஒரு காகிதத்துண்டோ புத்தகமோ இல்லாமல் வெறுங்கையுடன் வகுப்புக்குள் நுழைந்து கணித வினாக்களை மனதிலிருந்து கொணர்ந்து மாணவர்களுக்கு விளங்க வைக்கும் நல்லையரின் ஆற்றல் பல மாணவர்களைப் பல்கலைக்கழகம் அனுப்பி வைத்த பெருமைக்குரிய ஆசான் ஆக்கிற்று.
பாடத்திட்டத்தை ஒழுங்காக முடிக்கிறாரோ இல்லையோ என்ற விமர்சனங்கள் இருந்தபோதும் அவரிடம் படித்தவை யாவுமே தம்மைச் சித்திபெற வைக்க உதவியதாகச் சொல்லும் மாணவரும் அவரது கற்பித்தல் திறனின் சான்றாய்த் திகழ்ந்தனர்.
கரவெட்டி சயன்ஸ் சென்ரர் முதலில் தொடங்கிய வீடு எங்களது அயல் வீடு.
போஸ்ட் மாஸ்டர் சந்தியாப்பிள்ளை அவர்களின் இல்லம் தான் அதன் புகுந்த வீடு.
எழுபதுகளில் நல்லையா மாஸ்டர் படிப்பிக்கும் குரல் மாலை முதல் இரவு வரை எங்கள் வீடடுக்கு செலோ வாத்தியத்தை கீழ்ஸ்தாயியில் இசைத்தால் வரும் ஒலியாகக் கேட்கும்.
அவர் "இசைத்த" சிகரட்டுகளே அவர் குரலை அத் தொனியில் படிப்பிக்கச் செய்தன என்பதை அவரது மாணாக்கர் அறிவர்.
பிரயோக கணிதம் தூய கணிதம் என்பவற்றைப் படிப்பதென்றால் அப்படிக் குரல் இருப்பதும் அவசியம் போலும் என்பதை அவரிடம் படித்த மாணவர்களின் சித்திப் பெறுபேறுகள் காட்டின
பழைய சயன்ஸ் சென்ரருக்கு இரசாயனம் படிப்பித்த சண்முகதாஸ் மாஸ்டர் ஸ்கூட்டரிலும் கேவிஎன் ( நடராஜா) மாஸ்டர் மொறிஸ் மைனர் கார் ஒன்றிலும், ஆர்பி மாஸ்டர் பிரப்பங்கூடையை முன்னாற் பொருத்திய சைக்கிளிலும் வருவதை சிறுவனாகவிருந்த காலத்தில் கண்ட நினைவுகள் வருகின்றன.
.
சயன்ஸ் சென்ரர்- பின்பு அமரர் மகாலிங்கம் மாஸ்டர் வீடடுக்குப் போனது. எனக்கு அதில் உயர்தரம் படிக்க வாய்ப்புக் கிடைத்தது.
நான் உயிரியல் விஞ்ஞானம் மேற்கொண்டமையால் நல்லையா மாஸ்டரிடம் படிக்கக் கிடைக்கவில்லை.
நலலையர் பிரயோக கணிதத்தையும் தூய கணிதத்தையும் படிப்பித்தார்.
"வெக்டர்" வேலாயுதம் நல்லையா மாஸ்டர் ஆகியோர் சயன்ஸ் சென்ரரின் கணிதத் தூண்கள்.
நல்லையா மாஸ்டர் சயன்ஸ் சென்ரர் நிருவாகியான அமரர் இராஜரத்தினத்தை -அதன் ஆரம்பகாலம் முதல் அதில் பணியாற்றியதால் நன்றியுடனும் நட்புடனும் இறுதிவரையும் மதித்து வந்தார்.
நவீன கணிதத்திற்கு வடக்கில் புகழ்பெற்ற சிதம்பரப்பிள்ளை மாஸ்டரும் சயன்ஸ் சென்ரரின் புகழுக்குக் காரணமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுற்றாடலில் எமது வளர்ச்சியில் வகிபாகங்களாக நாம் கண்ட ஆசான்கள் அமைகின்றனர். அவர்கள் கட்டாயம் எமக்குப் படிப்பித்துத்தான் அந்த வகிபாகத்தை ஆற்றவேண்டியதில்லை என்பதற்கு நல்லையா மாஸ்டர் ஓர் உதாரணம் என்பேன்.
நல்லையா மாஸ்டரிடம் படிக்காதபோதிலும் அவர் பிறந்த ஊரின் அயலூரில் பிறந்தோம், அவர் திரிந்த ஊரில் நாமும் திரிந்தோம், அவர் படிப்பிப்பதைப் பார்த்தோம்- அவர் குரலைக் கேட்டோம் அவரது மாணவர்களுடன் படித்தோம்- என்பதெல்லாவற்றையும் விட
மகத்தான கணிதப் பரம்பரைகளை உருவாக்கிய பெருமனிதர் என்பதை நினைவு கூருவதே அவருக்கு அஞ்சலி செய்வதிலுள்ள சிறப்பாகும்.
அவருக்கான அஞ்சலிப்பதிவொன்றில் குறிப்பிட்டது போல- போர்க்காலத்தில் ஒரு புறம் போராளிகளாக மாணவர்கள் அணிதிரண்ட காலத்தில்,
மறுபுறம் பல்கலைக் கழகங்களுக்கு பல மாணவர்களை அனுப்பிக் கொண்டிருந்த போராளி அவர் என்பது உண்மை.
எமது காலத்தில் அவரிடம் கற்ற பலர் பல்வேறு இயக்கங்களிலும் போராளிகளாகவும் போனதுமுண்டு.
அந்த அனுபவங்களையும் நேரில் கண்ட வடக்கின் ஆசான்களில் ஒருவரானவர் அவர்.
தனது வாரிசு ஒன்றும் போராளியான தை அனுபவித்த ஈழமண்ணின் ஆசிரியத் தந்தையர்களில் ஒருவரானவர் அவர்.
நல்லையா சேர்!
உங்களுக்கு எங்கள் மனமார்ந்த அஞ்சலிகள் உரித்தாகுக!!
Post a Comment
Post a Comment