சுகயீன தந்திகளை பாடசாலைக்கு அனுப்பும் , ஆசிரியர்கள்




 


(க.கிஷாந்தன்)

 

இன்று 25.04.2022 திங்கட்கிழமை இலங்கையின் ஆசிரியர்கள், அரசின் பொருளாதார கொள்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மேற்கொண்டுள்ள சுகயீன போராட்டத்திற்கு மலையக ஆசிரியர்களும் இணைந்துக் கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


நாட்டில் காணப்படும் எரிப்பொருள் பிரச்சினைக் காரணமாக ஆசிரியர்கள் தொழிலுக்கு செல்வதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். மேலும் அத்தியவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக பல மணி நேரம் ஆசிரியர்கள் வரிசையில் நின்று அந்த பொருட்களை பெற்றுக் கொள்வதினால் குறித்த நாட்களில் குறித்த நேரத்திற்கு பாடசாலைக்கு கடமைக்கு சமூகமளிக்க முடியாமைக் காரணமாக பல்வேறு மன வேதனைக்கு ஆசிரியர்கள் உட்பட்டுள்ளனர்.


எனவே நாட்டின் எதிர்கால சந்ததியை உருவாக்கும் ஆசிரியர்களான தம்மை சிறந்த மன நிலையுடன் கடமையாற்ற அரசு வழி செய்ய வேண்டும் என்று கோரியே இந்த ஒரு நாள் சுகயீன போராட்டத்தை இன்று ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ளனர்.


இன்று மலையக பாடசாலைகள் மூடிய நிலையில் காணப்பட்டதுடன், ஆசிரியர்கள் அஞ்சல் அலுவலகங்களில் சுகயீன தந்திகளை பாடசாலைக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.


அதிபர், ஆசிரியர்களின் இந்த சுகயீன போராட்டம் தொடர்பான தகவல்களை அறியாத ஒரு சில மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தந்து திரும்பி சென்றதை காணக்கூடியதாக இருந்தது.


இன்றைய இந்த போராட்டத்திற்கு அதிபர், ஆசிரியர்கள் 100வீத ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக ஆசிரிய தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.