ஐதராபாத்: நிஜாமுத்தீன் மசூதியில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையின்போது உரையாற்றிய ஐதராபாத் எம்.பி. அசதுத்தீன் ஒவைசி, இந்தியாவிலிருந்து இஸ்லாமியர்கள் துடைத்து எரியப்படுவதாக வேதனை தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர் நாடு முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக அரங்கேறும் வன்முறை சம்பவங்களை பட்டியலிட்டார்.
தினசரி அரங்கேறும் அநீதிகள்
அப்போது பேசிய அவர், "அநீதியான பல விசயங்கள் நம் நாட்டில் நடந்துகொண்டு இருக்கின்றன. அது தொடர்பாக எனக்கு தினமும் அழைப்புகள் வந்தபடியே உள்ளன. நாம் தடுமாறிக் கொண்டு இருக்கிறோம். நமது கடைகளும், வீடுகளும் தகர்க்கப்பட்டு கொண்டு இருக்கின்றன. நாம் பயந்துவிட்டதாக சிலர் சொல்கிறார்கள். நாம் கவலைப்படுவதாக சிலர் சொல்கிறார்கள்.
அரசின் அடக்குமுறை
நான் இங்கு உங்கள் முன் ஒன்றை சொல்கிறேன். அதிர்ச்சியடையாமல் இருங்கள். நம்பிக்கையோடு இருங்கள். இந்தியாவில் அரங்கேறிக் கொண்டு இருக்கும் சம்பவங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசின் அடக்குமுறைகளாகும். மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் ஏராளமான முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. சென்த்வாவில் 13 வீடுகள் இடிக்கப்பட்டன.
கை இல்லாதவரின் கடை இடிப்பு
மத்திய பிரதேசத்தில் வசீம் சேக் என்பவரது கடை புல்டோசர் கொண்டு தகர்க்கப்பட்டது. இரண்டு கைகளும் இல்லாத அவர் கலவரத்தில் கல் எரிந்ததாக கூறி கடையை இடித்தனர். அரியானாவில் வயதான நபரை பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் கொடூரமாக தாக்கி தாடியை வெட்டினர். அதே அரியானாவில் பசுக்களை வெட்டியதாக கூறி ஒருவரை கடத்திச் சென்று கொடூரமாக தாக்கினர்.
ஜஹாங்கிர்புரி வீடுகள் இடிப்பு
ஜஹாங்கிர்புரியில் முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டனர். அவர்களது கடைகள், வீடுகள் அனைத்தும் புல்டோசரில் இடிக்கப்பட்டன. ஒருபோதும் தைரியத்தை இழக்காதீர்கள். அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவோம். கொடூரமானவர்களே! கொஞ்சம் கவனியுங்கள். நாங்கள் உங்கள் அடக்குமுறைகளை கண்டு அஞ்சவில்லை. எங்கள் பொறுமையுடன் போராடிக் கொண்டிருக்கிறோம். களத்தைவிட்டு செல்ல மாட்டோம்." எனக்கூறிய அவர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டு அழுதார்.
Post a Comment
Post a Comment