8 பவுசர் பெற்றோல் கொண்டுவரப்பட்டாலும் பெற்றோலுக்கான கேள்வி




 


வி.சுகிர்தகுமார்  

  மாதம் தோறும் 5 பவுசர் பெற்றோல் மாத்திரமே பயன்படுத்தப்பட்ட நிலையில் மாதம் முடிவடைவதற்கு முன்னர் 8 பவுசர் பெற்றோல் கொண்டுவரப்பட்டாலும் பெற்றோலுக்கான கேள்வி அதிகரித்து கொண்டே செல்கின்றது. இதன் காரணமாகவே மக்கள் இன்னும் நீண்ட வரிசைகளில் பெற்றோலுக்காக காத்திருப்பதையும் அறிய முடிகின்றது.

இன்று அம்பாரை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையிலே இத்தகவலை அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் மூலமாக அறியக்கிடைத்தது.

அம்பாரை மாவட்டத்தில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருள் வழங்கப்படும் நிலையில் எரிபொருளுக்கான கேள்விகள் அதிகரித்தவாறே உள்ளது.  இந்நிலையில் எரிபொருள் வழங்கும் சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசைகளில் மக்கள் தொடர்ந்தும் காத்திருப்பதையும் எரிபொருள் கொண்டுவரும் வாகனத்தை கூட குழுமியிருந்து வரவேற்று பார்வையிடும் நிலையினையும் காண முடிகின்றது.

ஆலையடிவேம்பு பல நோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று நண்பகல் முதல் பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக அதிகமான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோ வாகன உரிமையாளர்கள் காத்திருந்ததுடன் நண்பகல் முதல்; பெற்றோலை வழங்கும் செயற்பாடுகள் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

இங்கு கடமையாற்றும் ஊழியர்கள் தமது சேவையினை துரிதமாக முன்னெடுப்பதுடன்; காலமறிந்து அதிகளவான ஊழியர்களை கடமையில் இருந்தி எரிபொருள் வழங்கும் செயற்பாட்டை விரைவு படுத்துவதனால்  அதிகமான பொதுமக்கள் விரைவாக எரிபொருளை இங்கு பெற்றுச் செல்வதை  காணமுடிகின்றது.

எது எவ்வாறாயினும் தொடர்ச்சியாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசைகளில் மக்கள் காத்திருக்கும் நிலையில் அதிகமான பொதுமக்கள் பெற்றோல் தட்டுப்பாடு வரக்கூடும் எனும் நோக்கில் எரிபொருளை சேமித்து வருகின்றார்களா எனும் சந்தேகமும் எழுகின்றது.

இந்நிலையில் பெற்றோல் உரிய வேளைக்கு கிடைக்காத காரணத்தால் பாடசாலைக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் அரச திணைக்கள் உத்தியோகத்தர்கள் விவசாயிகள் அன்றாட கூலித்தொழிலாளர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் பதுக்கல் வியாபாரிகளினால் 400 ரூபாவிற்கும் மேல் பெற்றோல் விற்பனை செய்யப்படுவதாகவும்; தகவல் வெளியாகி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.