28ம் திகதி நடைபெறுகின்ற தொழிற்சங்க போராட்டங்கள்





 (க.கிஷாந்தன்)

28ம் திகதி நடைபெறுகின்ற தொழிற்சங்க போராட்டங்களில் மலையக தொழிற்சங்கங்களும் இந்த போராட்டங்களில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் அணைவரும் இதில் இணைந்துக் கொள்ள வேண்டும் என்பதோடு, தோட்ட தொழிலாளர்களும் இதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அட்டனில் 26.04.2022 அன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

விலைவாசி உயர்வு, அரசியல் அராஜகம் போன்ற பிரச்சினைகள் இந்த நாட்டில் நடந்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் அரசுக்கு எதிராக 28ம் திகதி போராட்டத்தை நடத்த இருக்கின்றனர்.

இதற்கு நாங்களும் ஆதரவு வழங்கி இணைந்துக் கொள்கின்றோம். எனவே மலையக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த போராட்டதுக்கு ஆதரவு வழங்க வேண்டும்.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கிய இ.தொ.காவின் செயலை நாங்கள் வரவேற்கின்றோம். காலம் கடந்து இந்த தீர்மானத்தை எடுத்திருந்தாலும் நல்ல முடிவை எடுத்துள்ளார்கள்.

கோட்டா, மகிந்த என ராஜபக்ச குடும்பமே வீட்டுக்கு போக வேண்டும் என எல்லோரும் இணைந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அரசாங்கம் கலைய வேண்டும், புதிய அரசாங்கம் உருவாக்க வேண்டும். அப்போது தான் இலங்கையில் ஒரு சுமூகமான நிலைமை உருவாகும்.

இம்முறை மே தினம் மக்கள் எதிர்ப்பு மே தினமாக கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று பொருளாதார நிலைமை மிக மோசமாக இருக்கின்றது. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை. தோட்ட தொழிலாளர்களுக்கு 100 சத வீதமான சம்பள உயர்வு தர வேண்டும் என்பது தான் இம்முறை மே தின கோஷமாக இருக்கும்.

ஒவ்வொரு தோட்டங்களிலும் கறுப்பு கொடிகளை ஏந்தி மே தினத்தை நடத்த வேண்டும் என்பதே எங்களின் வேண்டுக்கோளாக இருக்கின்றது. அரசாங்கத்தின் பெரும்பான்மை மிக விரைவில் வீழ்ச்சியடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.