சிறுபான்மை மக்கள் மீது அரசின் பார்வை திரும்பியுள்ளது





எங்களின் சமூகம் சார்ந்த எத்தனங்களை செய்தோம், இப்போது சிறுபான்மை மக்கள் மீது அரசின் பார்வை திரும்பியுள்ளது    - பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்


நூருல் ஹுதா உமர்


நாட்டின் பொருளாதாரத்தை சிறந்தமுறையில் சீரமைக்க இனவாதமில்லாத அரசும், இனவாதமற்ற நாடும் தேவையாக உள்ளது. அந்த நிலையிலிருந்து மாற்றியமைக்கப்படுகின்ற போது நாடு பொருளாதாரத்தில் வலுப்பெறும். பலம்பொருந்திய ஆசிய நாடுகளின் உதவிகள் எமக்கு கிடைக்கும் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. மிகமோசமான சூழ்நிலைகளில் அச்சம் நிலவிய காலப்பகுதிகளில் எங்களின் சமூகம் சார்ந்த எத்தனங்களை செய்தோம். இப்போது சிறுபான்மை மக்கள் மீது அரசின் பார்வை திரும்பியுள்ளது என இன்று (08) கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் தேசத்தைக் கட்டியெழுப்பும்  “சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைக்கு அமைவாக இலங்கைக் கல்வியின் உண்மையான சுதந்திரத்திற்காக தேசிய பாடசாலைகள் எண்ணிக்கையை 1000 வரையில் அதிகரிக்கும் தேசிய நிகழ்வும், சர்வதேச மகளிர் தினமும் - 2022 நிகழ்வின் ஒரு அங்கமாக கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியை தேசிய பாடசாலையாக மாணவிகளுக்கு உரித்தாக்கும் நிகழ்வு சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் பாடசாலை அதிபர் யூ. எல்.எம். அமீன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,


எமது நாட்டின் அரச கட்டமைப்பில் உக்ரேன்- ரசிய யுத்தத்தின் பின்னர் விரும்பியோ, விரும்பாமலோ செல்வாக்கு செலுத்தியுள்ளது. இதனால் சிறுபான்மை மக்களின் மீதான அரசின் பார்வை அண்மைய நாட்களில் திரும்பியுள்ளதை நிதியமைச்சர் பசிலின் அண்மைய அறிவிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இனவாத சாயமில்லாத தேசிய அரசை நிறுவ தயாராகி வருவதாக அறிவிப்புக்கள் வந்துகொண்டிருக்கிறது. அதனிடையே எங்களின் ஜனாஸாக்களை எங்களின் பிரதேசங்களிலையே நல்லடக்கம் செய்ய அனுமதி கிடைத்துள்ளது.


பாராளுமன்றத்திலும் மாகாணசபையிலும் கூட 25 சதவீத ஆசன ஒதுக்கீடுகளை பெண்களுக்கு வழங்க வேண்டும் என்று பாராளுமன்ற தெரிவுக்குழு கலந்துரையாடி  வருகிறது. நாட்டின் தலைமை பதவிகளை பெண்களுக்கு வழங்கி உலகுக்கே பெண்களை கௌரவப்படுத்தி காட்டிய நாடக இலங்கை  இருக்கிறது. இப்போதும் எமது நாட்டில் அரசியல், பொருளாதாரம் என எந்த துறையாக இருந்தாலும் அந்த துறைகளில் பட்டங்கள், பதவிகளை வழங்கி எமது நாடு பெண்களை கௌரவித்தே வருகிறது. எமது நாட்டின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச பெண்களை ஊக்கப்படுத்தும் விதமாக கிராமிய அபிவிருத்தி திட்டங்களுக்கு என பல மில்லியன்களை இந்த ஆண்டின் வரவுசெலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்துள்ளார்.


18ம் நூற்றாண்டில் உலகம் விவசாய புரட்சி செய்தது. 19ம், 20ம் நூற்றாண்டுகளில் பொருளாதார புரட்சி செய்தனர். 21ம் நூற்றாண்டில் இப்போது அறிவுசார்ந்த புரட்சி செய்து வருகின்றனர். புதிய கண்டுபிடிப்புக்களின் வாயிலாக பல ரில்லியன்களை உழைக்கும் காலம் இப்போது வந்துள்ளது. அதை பயன்படுத்தி  பெண்பிள்ளைகள் எப்படி எதிர்காலத்தை உருவாக்கலாம் என்பது பற்றி சிந்திக்கவேண்டும். கடந்த அரசின் பலவீனங்களினால் பாடசாலைகளுக்கான அபிவிருத்திகள், வளங்கள், மேம்பாடுகளை செய்வதில் சிக்கல்கள் இருந்தது. இந்த பாடசாலையை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த முன்னாள் ஆளுநர் டாக்டர் எம்.எல்.எம்.ஏ. ஹிஸ்புல்லா, கல்வியமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர், மேலதிக வெளியீட்டு பணிப்பாளர் நாயகம் இஸட். தாஜுதீன் போன்றவர்களின் உதவிகளை நாங்கள் மறந்துவிட முடியாது. இன்று இந்த பாடசாலை தரமுயர்ந்து இருக்க காரணமாக அமைந்த பிரதமர் கல்வியமைச்சர் போன்றோருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்

என்றார்.


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நாடு முழுவதும் நடைபெற்றுவரும் இந்நிகழ்வின் ஒரு அங்கமாக கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வி வெளியீட்டு திணைக்கள மேலதிக ஆணையாளர் நாயகம் இசட். தாஜுதீன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம். டவலியு. ஜீ. திஸ்ஸநாயக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் என். புள்ளநாயகம், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரன், கல்முனை கல்வி மாவட்ட பொறியியலாளர் ஏ.எம். ஸாஹிர், பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி அதிகாரி வீ. எம். ஸம்ஸம், முன்னாள் அதிபரும், சாய்ந்தமருது கலாச்சார அதிகார சபை பிரதித்தலைவருமான ஏ. எச்.அப்துல் வஸீர், கல்முனை வலய பாடசாலைகளின் அதிபர்கள், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி பிரதி அதிபர் ஆர்.எம். அஸ்மி காரியப்பர்,  நிர்வாகம், மாணவர்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.