கோடரியால் தாக்கி மாணவியை கொலை செய்தவர் கைது




 


(க.கிஷாந்தன்)

பதுளை – ஹாலி எல, உடுவரை மேற்பிரிவைச் சேர்ந்த பாடசாலை மாணவியொருவர், கோடரியால் தாக்கப்பட்டு கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், இன்று (9) அதிகாலை பொலிஸில் ஆஜராகியதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார் என ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று   பாடசாலைக்கு சென்று வீடு,  திரும்பிய 18 வயதான மாணவியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பழைய பகையொன்றே இச்சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனுடன் தொடர்புடைய 32 வயதான சந்தேகநபர், பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில், அவரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சந்தேகநபர் இன்று அதிகாலை ஹாலிஎல பொலிஸில் ஆஜரானார் என  பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹாலி எல தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர் தரத்தில் கல்வி கற்கும் தர்மராஜா நிதியா (வயது 18) என பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஒருவருடமாக குறித்த மாணவியை சந்தேகநபர் ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும் அதனை  அம்மாணவி நிராகரித்து வந்துள்ளார். அத்துடன் மாணவியின் பெற்றோரும் இக்காதலை எதிர்த்தமையால், மாணவியின் பெற்றோர்  சந்தேகநபரால் இதற்கு முன்னர் கத்திகுத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.