அட்டாளைச்சேனை நியூ ஸ்டார்ஸ் விளையாட்டுக்கழகம்,சம்பியனானது




 


"ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் வெற்றிக்கிண்ணம் - 2022" : சாய்ந்தமருது ரெட்மேக்ஸ் அணியை வீழ்த்தி சம்பியனானது அட்டாளை நியூ ஸ்டார்ஸ் !


நூருல் ஹுதா உமர் 


சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் விளையாட்டுக்கழக ஏற்பாட்டில் நடைபெற்ற "ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் வெற்றிக்கிண்ணம் - 2022" இந் சம்பியனாக அட்டாளைச்சேனை நியூ ஸ்டார்ஸ் விளையாட்டுக்கழகம் தெரிவானது. அணிக்கு எட்டுப்பேர் கொண்ட 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியாக நடைபெற்ற இந்த  மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 22 அணிகள் கலந்துகொண்டு இறுதிப்போட்டிக்கு அட்டாளைச்சேனை நியூ ஸ்டார்ஸ் விளையாட்டுக்கழகமும், சாய்ந்தமருது ரெட்மக்ஸ் விளையாட்டுக்கழகமும் தெரிவானது. 


சாய்ந்தமருது பௌசி விளையாட்டுமைதானத்தில் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற இறுதியாட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அட்டாளைச்சேனை நியூ ஸ்டார்ஸ் விளையாட்டுக்கழகம் 05 ஓவர்களை எதிர்கொண்டு 54 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு 55 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது ரெட்மக்ஸ் விளையாட்டுக்கழகம் 05 ஓவர்கள் முடிவில் 30 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தனர். இந்த சுற்றுப்போட்டியின் தொடராட்டகாரராக 04 விக்கட்டுக்களை வீழ்த்தி 71 ஓட்டங்களை பெற்ற ரஸா தெரிவானார். தொடர்ந்தும் இறுதியாட்ட நாயகனாக அட்டாளைச்சேனை நியூ ஸ்டார்ஸ் விளையாட்டுக்கழக வீரர் அப்ராஸும், தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக ஷமீர், துடுப்பாட்ட வீரராக ரஸா, களத்தடுப்பாளராக நக்மல் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டு பாராட்டப்பட்டனர்.  


சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் விளையாட்டுக்கழக ஒருங்கிணைப்பாளர் எல்.எம். ஷிப்னாஸின் தலைமையில் நடைபெற்ற இறுதிநாள் பரிசளிப்பு நிகழ்வில் விளையாட்டு உத்தியோகத்தரும், சாய்ந்தமருது விளையாட்டுக் கழகங்களின் சங்க செயலாளருமான ஏ.எம். றிசாத், கிழக்கு மாகாண கணனி தொழிநுட்ப பேரவை பணிப்பாளர் யூ.எல்.என். ஹுதா உமர், ரெட்மேக்ஸ் நிறுவன பணிப்பாளர் ஏ.என்.எம். ஜாவித், ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் விளையாட்டுக்கழக ஒருங்கிணைப்பாளர் அஸ்வர் அப்துல் ஸலாம், கழக முகாமையாளர் அஸ்வர் கழக பயிற்றுவிப்பாளர் ஆசிரியர் எம்.எச்.எம்.முஸ்பீக் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர். இதன்போது சகல போட்டிகளிலும் ஆட்டநாயகர்களாக தெரிவானோருக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.