64 ஆவது ஸஹிஹுல் புஹாரி தமாம் வைபவம்






நூருள் ஹுதா உமர்.



ஆளுமையுள்ளோர், அறிஞர்கள், ஞானிகள் மீது இல்லாததை இட்டுக்கட்டி ஓரங்கட்ட முயற்சிக்கும் பொறாமையாளர்களின் கெடுதிகள்,  இமாம் புஹாரி ரஹ்மதுல்லாஹ் அவர்களையும் கடுமையாகப் பாதித்திருந்ததாக அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல் தலைவரும், ஜும்ஆ பெரியபள்ளிவாசல் தலைவருமான "கிழக்கின் கேடயம்" எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.




அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளி வாசலில் உலமாக்கள், மற்றும் மக்கள் திரளோடு  ஞாயிற்றுக்கிழமை (06) மாலை நடந்த 64 ஆவது ஸஹிஹுல் புஹாரி தமாம் வைபவத்தில் விஷேட உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். இங்கு பேசிய அவர் குறிப்பிட்டதாவாது. 


புனித அல்குர்ஆனுக்கு அடுத்ததாக மதிக்கப்படும் ஸஹீஹுல் புஹாரி ஹதீஸ் கிரந்தத்தின் தமாம் நிகழ்வில் பங்கேற்ற நாம் அனைவரும் நற்பேறாளர்கள்தான். மிகப்பெரிய ஞானத்திரவியமாக மதிக்கப்படும் இமாம் புஹாரி அவர்கள் அற்புத ஆற்றலுள்ளவர். பத்து வயதில் குர்ஆனை மனனம் செய்த அவர், பதினோராவது வயதில் ஹதீஸ்கலையில் தேர்சியடைந்தார் இத்துறைகளோடு மட்டும் அவர் தனது அறிவை மட்டுப்படுத்தவில்லை. பிக்ஹ்கலை (சட்டநுட்பம்) நபியவர் களின் ஹதீஸ்களை அறிவிப்புச் செய்த ராவிகள் பற்றிய வரலாற்றுத் தெளிவும் அவருக்கிருந்தது. 


ஸஹீஹைன் என்றழைக்கப்படும் ஆறு புனித ஹதீஸ் கிரந்தங்களில், ஸஹீ ஹுல் முஸ்லிம் மற்றும் ஜாமிஉத்திர் மிதி ஆகிய கிரந்தங்களின் ஆசிரியர் கள் இமாம் புஹாரிஅவர்களின் மாணவர்களே. இவ்வளவு ஆற்றலுள்ள ஒரு புஹாரி ரஹ்மத்துல்லாஹ்  அவர்களை கண்டு அருகில் இருந்த சக அறிஞர்கள் பொறாமைகொண்டு அவரை அழித்துவிடும் பணியில் இறங்கினார்கள் அதன் நோக்கில், யூத அறிஞர்கள் சிலரை வைத்து புஹாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்களை  கேள்வி கேட்டனர். 


குர்ஆன் படைக்கப்பட்டதா? அருளப்பட்டதா? என்பதே அக்கேள்வியாகும். அருளப்பட்டதென  இமாம் பதிலளித்தபோது, அருளப்பட்டதை எப்படிப்பார்த்து ஓத முடியுமென மறுகேள்வியையும் யூதர்கள் கேட்டனர். உங்கள் பார்வையும், குரலுமே படைக்கப்பட்டதென இமாம் புஹாரி பதிலளித்தார். இமாமைப் பழிதிர்க்க இந்தப் பதிலை சந்தர்ப்பமாகப் பயன்படுத்திய சக அறிஞர்கள் , குர்ஆன் படைக்கப்பட்டதாக இமாம் புஹாரி கூறியதாக இல்லாததை இட்டுக்கட்டினர். இதனால், ஏராளமான வலிகளைத் தாங்கும் துயரத்துக்கு உள்ளானவர் இமாம் புஹாரி அவர்கள். 

இருந்தாலும் சோரம்போகாத குணத்தால் குன்றாக உயர்ந்து நின்றவர் இமாம் அவர்கள்.


அரசனுடைய மகனுக்கு அறிவூட்ட தனது இல்லத்துக்கு வருமாறு அழைத்தபோதும், அறிவு காலடிக்குச் செல்லாது, கால் மடித்துக்கற்க வேண்டிய ஒன்றெனக்கூறி அரசனின் அழைப்பையும் நிராகரித்த,  நிகரில்லாத நிறைகுடமாகவே இமாம் புஹாரி அவர்கள் திகழ்ந்தார்கள். 


ஹிஜ்ரி 250 களில் இடம்பெற்ற இந்த அபாண்டம் சுமத்தும் கபடத்தனமும்  அரசனின் குழந்தைகளுக்கு அடிமையாக இருக்க பணிக்கும் அதிகார துஸ்பிரயோகங்களும் உலகம் அழியும்வரை  நீடிக்காமல் தடுக்கும் ஆயுதம் மக்கள் கைகளில்தான் இருக்கின்றது  நீங்கள் காதில் கேட்பவைகளை நம்பாமல் உண்மைகளை தேடி நம்புபவர்களாகவும் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களாகவும்  மாறினால் போதும் இவ்வாறானவர்கள்  தடமே இல்லாமல் போய்விடுவார்கள் எனவும் தெரிவித்தார். 


இந்நிகழ்வின் இறுதியில் கந்தூரி அன்னதானமும் நடைபெற்றது.