இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சர்வதேசப் பெண்கள் தினம் எப்படித் தோன்றியது? நிச்சயமாக கொண்டாட்டத்தில் அல்ல போராட்டத்தில்தான் அது தொடங்கியது.
அமெரிக்கத் தொழிற்சங்க இயக்கத்துக்கும், ரஷ்யப் புரட்சி இயக்கத்துக்கும் இதில் பங்கு உண்டு.
1975-ம் ஆண்டுதான் இந்த நாளை சர்வதேசப் பெண்கள் தினமாக ஐ.நா. அங்கீகரித்தது. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இந்த நாள் பெண்களுக்கு முக்கிய நாளாக உலகின் பல பகுதிகளில் இருந்து வருகிறது.
எப்படித் தொடங்கியது?
வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி, வாக்களிக்கும் உரிமை கோரி 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி ஒரு பேரணியை நடத்தினர். இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி.
இந்த நாளினை சர்வதேச தினமாக அனுசரிக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்தவர் கிளாரா ஜெட்கின். கோபன்ஹேகனில் 1910-ம் ஆண்டு நடந்த உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் இந்த யோசனையை முன்வைத்தார் கிளாரா. அந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்துகொண்டனர்.
இதையடுத்து 1911-ம் ஆண்டு முதல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதை அடிப்டையாகக் கொண்டே 2011-ம் ஆண்டு நூறாவது சர்வதேசப் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. எனவே, அந்த வகையில் இது 108-வது பெண்கள் தினம்.
எனினும் 1975-ம் ஆண்டில்தான் ஐ.நா. மார்ச் 8-ஐ சர்வதேசப் பெண்கள் தினமாக முறைப்படி அறிவித்து கொண்டாடத் தொடங்கியது. அத்துடன் ஒவ்வோர் ஆண்டின் பெண்கள் தினத்துக்கும் ஒரு முழக்கத்தையும் முன்வைத்துவருகிறது ஐ.நா. இதன்படி ஐ.நா. அறிவிப்புக்குப் பின் வந்த முதல் பெண்கள் தினத்தின் முழக்கம் "சமத்துவத்தை யோசி, அறிவுபூர்வமாக கட்டியெழுப்பு, மாற்றத்துக்காக புதுமையாக சிந்தி" என்பதாகும்.
உழைக்கும் வயதில் உள்ள பெண்களில் சரிபாதி பேர்தான் உலக தொழிலாளர் தொகையில் இடம் பெற்றுள்ளார்கள் என்கின்றன ஐ.நா. புள்ளி விவரங்கள்.
Post a Comment
Post a Comment