சிறு பிள்ளை வைத்தியத்தில் வல்லுநராய் இயங்கியவர், மூத்த மருத்துவ முகவரி பெற்றவர், டாக்டர் அமரர் பொன் அருணகுலசிங்கம்.
மக்களின் சமூக வாழ்வுடன் தனது மனித நேயப்பங்களிப்புக்களையும், இணைத்து சிறப்பாகக் குழந்தைகளுக்கான மருத்துவக் கலையில் நிபுணத்துவம் பெற்றவரும், மக்களால் போற்றப்பட்டவருமான அமரர் டாக்டர் அருணகுலசிங்கம் ஐயா அவர்கள் இவ் வேளை எம் மத்தியில் இல்லை.
இவர் பாலமுனை அரச வைத்தியசாலையில் கடந்த 1961 ஆம் ஆண்டு இணைந்து நீண்ட காலம் சேவையாற்றி ஓய்வு நிலை அடைந்த பின்னர் 1969 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அக்கரைப்பற்று தனியார் வைத்தியசாலையை நடாத்தித் தனது மருத்துவத்தை வருமானம் ஈட்டும் தொழிலாகக் கருதாது, ஒரு சேவையாகவே அதனை மேற்கொண்டதுடன், அந்தச் சேவையைத் தொடர்வதற்குச் சிறந்த இடமாக அக்கரைப்பற்றையே தெரிவும் செய்தார்.
குழந்தைகளுக்கான மருத்துவக் கலையில் சிறந்த நிபுணத்துவம் பெற்ற அமரர் டாக்டர் அருணகுலசிங்கம் ஐயா அவர்கள் ; மாண்புமிக்க மனிதராகத் திகழ்ந்தவர். ஒரு நோயாளிக்குத் தனது நோய்க்குரிய சிகிச்சையைப் பெறுவதிலும் பார்க்க வைத்தியருடைய அன்பும், அரவணைப்பும், ஆலோசனைகளும், பெறுமதிமிக்கவையாகும். அந்த வகையில் அருணகுலசிங்கம் ஐயாவிடம் இருந்து அக்கரைப்பற்றுப் பிரதேச மக்கள் பெற்றுக் கொண்ட அன்பும், ஆதரவும், அனந்தம் எனலாம்.
எல்லா இன, மத, மொழி சார்ந்த மக்களுடன் அன்புடனும், பண்புடனும் பழகக் கூடியவர். சேவையில் ஆழ்ந்த கருத்துமிக்கவர். சமூக, ஒற்றுமைக்கு முன்னுதாரணமானவர். அறிவு, ஆற்றல், திறமைகளைத் தனது மருத்துவ சமூகப் பணியினூடாகப் பயன்படுத்தி தன் வாழ் நாளில் செய்ய வேண்டிய அனைத்துக் காரியங்களையும் நிறைவேற்றிய பெருமகன் இவர். சிறந்த, உயர்ந்த ஒழுக்க விழுமியங்களுக்குட்பட்டு வாழ்ந்த அன்னாரின் நேர்மை, பண்பாடு, பழக்க வழக்கங்கள் என்பன அவருடன் நான் நீண்ட காலம் நெருங்கிப் பழகிய வேளையில் என்னால் நன்கு புலப்படத் தொடங்கியது.
இன ஐக்கியத்தில் இறுக்கமாய் இருந்த அன்னார் திருமண வீடுகளுக்குப் பெரு மனதோடு அழைப்பையேற்றுச் சென்று சிறப்பிப்பவர். மரண வீடுகளுக்கும் மறக்காமல் சென்று இறுதி மரியாதை செலுத்துவதில் முன்னணி வகிப்பவர். நிதியுதவி கேட்டு வருவோருக்கு அதியுயர்ந்த தொகை கொடுத்து உதவுபவர். இத் தியாதி நற்குணங்களால் அவர் மரணித்த போதிலும் அன்னாரின் பசுமையான நினைவுகள் எம் உள்ளங்களில் இன்றும் பதிவாகி இருக்கின்றன.
வந்த ஊரை சொந்த ஊராக மதித்து வாழ்க்கையை நிதர்சனமாக வாழ்ந்து காட்டி அக்கரைப்பற்றின் உயர்ச்சிக்காய் ஏணி வைத்தவர்.
தனது சொந்தத் தேவைக்காக நீண்ட விடுமுறையில் கொழும்பு சென்று அங்கு தங்கியிருக்கும் நாட்களில் கூட, பல நோயாளர்கள் கொழும்புக்குச் சென்று அவரிடம் வைத்தியம் செய்தமையையும், அன்னாருடன் தொலைபேசி மூலம் தத்தமது நோய்களைச் சொல்லிச் சிகிச்சை பெற்றமையையும் நான் என் பார்வையில் அறிந்து கொண்ட விடயங்களாகும். மக்கள் மனதில் நீங்காத நினைவு பெற்றுள்ளமைக்கும் இன்னுமொரு காரணம் நோயை இனங்காணும் (Diagnosis) அன்னாரது திறமையையேயாகும். இவரின் வைத்திய ஆலோசனையின் இழப்பு என்னுடன் சேர்ந்து அல்லலுறும் ஏராளமான பல குடும்பங்களுக்குக் கவலையை ஏற்படுத்தியிருப்பதை உணரக் கூடியதாயிருக்கின்றது. இத்தகைய சிறப்புத் தன்மைகளைக் கொண்ட ஒரு சிறந்த வைத்தியரை இழந்து விட்ட துயரத்தில் இவ்வேளை அவரை நாம் நினைவு கூர்வது சாலச் சிறந்ததாகும்.
இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான அமரர் டாக்டர் அருணகுலசிங்கம் ஐயா அவர்கள் யாழ்ப்பாணம் நவாலி ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து அவர் கொழும்பு 07, பாண்ஸ் பிளேஸில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த வேளையில் 2010 ஆம் ஆண்டு எம்மை விட்டும் பிரிந்து விட்டார்.
Post a Comment
Post a Comment